சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், விலங்குகள் கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. ஆண்டுக்கு இருமுறை மழைக்காலத்துக்கு முன், பின் என, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், விலங்கு கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இதன்படி புலிகள் காப்பகத்தில் உள்ள, 10 வனச்சரக பகுதிகளிலும் நேற்று தொடங்கியது. வனச்சரகர், வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், என, 380 பேர் ஐந்து குழுக்களாக பிரிந்து ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவினரும், தனித்தனியாக சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பவானிசாகர் வனப்பகுதியில், செந்நாய், சிறுத்தை கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கணக்கெடுப்பு, வரும், 22ம் தேதி வரை நடக்கிறது. பிரத்யேக மொபைல் ஆப், ஜி.பி.எஸ்., வியூ பைன்டர் மற்றும் காம்பஸ் கருவிகளை பயன்படுத்தி, விலங்குகளின் கால் தடம் மற்றும் எச்சங்கள் கண்டறியப்பட்டு, விபரங்கள் பதிவு செய்யப்படும். முதல் மூன்று நாட்களுக்கு பகுதி வாரி கணக்கெடுப்பு, அடுத்த மூன்று நாட்கள் நேர்கோட்டுப்பாதை கணக்கெடுப்பு முறையிலும், விலங்குகளை நேரில் பார்த்தும் கணக்கெடுப்பு செய்யப்படும். பணி முடிந்தவுடன் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுப்பி வைக்கப்படும், இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE