காரிமங்கலம்: ''தர்மபுரி மாவட்டத்தில், 43 இடங்களில் மினி கிளினிக்குகள் துவங்கப்படும்,'' என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார்.
காரிமங்கலம் யூனியன், பொம்மஹள்ளி உச்சம்பட்டியில், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், மினி கிளினிக் துவக்க விழா, கலெக்டர் கார்த்திகா தலைமையில் நடந்தது. அமைச்சர் அன்பழகன் மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது: தமிழகம் முழுவதும், 2,000 மினி கிளினிக்குகள் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில், 41, நகரப்பகுதிகளில் இரண்டு என மொத்தம், 43 மினி கிளினிக்குகள் துவங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை, எளியவர்கள் வசிக்கின்ற பகுதிகளில், அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலும். புற நோயாளிகள் பிரிவு, கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, தாய்சேய் நலப்பணிகள், தடுப்பூசி வழங்கல், தொற்றா நோய்கள், அவசர சிகிச்சை ஆகிய மருத்துவ சேவை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ.க்கள் (பாப்பிரெட்டிபட்டி) கோவிந்தசாமி, (அரூர்) சம்பத்குமார், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் திலகம், துணை இயக்குனர் ஜெமினி, மருத்துவ அலுவலர்கள் சந்திரசேகர், அனுராதா உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE