அரியலூர்: ''பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் குடும்பங்களை கமல் சீரழித்து வருகிறார்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், முதல்வர் பழனிசாமி நேற்று, 192.59 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகளுடன், ஆய்வு மேற்கொண்டார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் கமல் ஓய்வு பெற்ற பின், அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும். பிக்பாஸை பார்த்தால் குடும்பம் கெட்டுப் போகும். அப்படிபட்டவர் ஒரு கட்சியின் தலைவராக உள்ளார். அப்படிபட்ட தலைவரின் கேள்விக்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா? பிக்பாஸில் என்ன இருக்கிறது என்று, அதை கமல் நடத்தி வருகிறார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்பவர் அவர் அல்ல. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவர் வேலை. இந்த தொடரை பார்த்தால் குழந்தைகளும் கெட்டு போகும். நல்லா இருக்கும் குடும்பமும் கெட்டு போகும். எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள் அனைத்தும் நல்ல படங்கள். கமல் ஒரு நல்ல படமாவது எடுத்துள்ளாரா? திட்டங்களை செயல்படுத்தியதில், தமிழக அரசு இந்திய அளவில் முதல் மாநிலமாக செயல்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி உள்ளது என, பிரதமரே பாராட்டி உள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் குறை சொல்லி வருகிறார். அரசு அலுவர்கள் லஞ்சம் வாங்கி சிக்கி வருகிறார்கள் என கமல் கூறுகிறார். லஞ்ச ஒழிப்புத்துறை யார் கையில் உள்ளது. தமிழகத்தில் சிறப்பாக தானே செயல்படுகிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் பேச்சு நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
குழந்தைக்கு பெயர்: பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தில், பொது மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வரிடம், ஒரு தம்பதி தன் குழந்தைக்குபெயர் வைக்க கோரினர். காரை விட்டு கீழே இறங்கி, குழந்தையை வாங்கி, ராஜேஷ் என பெயர்சூட்டி குழந்தையை ஆசீர்வதித்தார்.
சிறுவனுக்கு மரியாதை: முன்னதாக சேலம் மாவட்டம், கெங்கவல்லி தொகுதி, லத்துவாடியில், 'மினி கிளினிக்'கை, முதல்வர் திறந்து வைத்தார். அங்கிருந்து அரியலூர் செல்லும் வழியில், பெரம்பலூர், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, சாலையோரம் தன் பெற்றோருடன் வந்திருந்த சிறுவன் முதல்வரின் கார் தன்னை கடந்த போது, கைக்கூப்பி வணங்கினான். இதைப்பார்த்த முதல்வர் காரை நிறுத்தச் சொல்லி, அந்த சிறுவனை அருகில் அழைத்து சாக்லெட் கொடுத்து சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE