சேலம்: ''கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 15 நாளுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று காலை, சேலம் அரசு மருத்துவமனையில், காது, மூக்கு, தொண்டை பிரிவு, பிரசவ வார்டு, கேண்டீனில் ஆய்வு நடத்தினார். அங்கு முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, மூத்த மருத்துவர்களுடன், கொரோனா குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும், 75 ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் பரிசோதனையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1,100 ஆகத்தான் உள்ளது. அதன் இறப்பு விகிதம், 1 சதவீதமாக உள்ளது. பாதிப்பு விகிதம், 2 சதவீதம். இதை, பூஜ்யமாக மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முக கவசம் அணியாமல், மக்கள் அலட்சியம் காட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை, அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். சென்னை, ஐ.ஐ.டி.,யில் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் பரிசோதிக்கப்பட்டது. அண்ணா பல்கலையிலும், பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலம் முழுதும் உள்ள கல்லூரிகளில் படிக்கும், இறுதியாண்டு மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒருமுறை, தொற்று உள்ளதா என்பதை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. பல கல்லூரிகளில், வீட்டிலிருந்தே படிக்க அறிவுறுத்துகின்றனர். மாணவர்கள், அதை பின்பற்றலாம். கல்லூரி, மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், பரிசோதனை நடத்துவது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்கள், மனநல பாதிப்புக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக, அரசு மருத்துவமனைகளில், மனநல மருத்துவர்களால், 'கவுன்சிலிங்' வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், உடனே ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE