புதுடில்லி: இந்தியாவில், முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு, கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவழிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ உதவியாளர்கள் என ஒரு கோடி சுகாதார பணியாளர்கள், 2 கோடி முன்கள பணியாளர்கள் மற்றும் இதய நோய், நீரழிவு நோய் தாக்கம் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 27 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது. தற்போதைய நிலையில் அவசர கால பயன்பாட்டிற்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டு, பைசர், பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனங்கள், இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன. இதன் மீது ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவு செய்ய உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக, சர்வதேச நிறுவனங்களிடம் கடன் வாங்குவதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பானது, இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுடன் ஐ.நா., அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனமானது, 2021 மார்ச் மாதத்திற்குள் 500 மில்லியன் டோஸ் அளவு மருந்தை, உற்பத்தி செய்வோம் என தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் விலையானது ஒரு டோசுக்கு ரூ.250 ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசு தயாரித்த திட்டப்படி 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 600 மில்லியன் டோஸ் மருந்து தேவைப்படும்.
இந்தியாவில், ஏற்கனவே, பீஹார், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளன. இந்த வரிசையில், மேலும் சில மாநிலங்கள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE