பள்ளிபாளையம்: சமயசங்கிலி சுற்று வட்டாரத்தில், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கரும்பு சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பும் வழங்கப்படுகிறது. இதனால், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பள்ளிபாளையம் அடுத்த கரமேடு, சமயசங்கிலி, செங்குட்பாளையம், தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு கூடுதலாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரமேடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: இந்தாண்டு சுற்றுவட்டார பகுதியில், கூடுதலாக, 100 ஏக்கருக்கும் மேல் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி அதிகரித்துள்ளதால், நாமக்கல் மாவட்டத்திற்கு கொள்முதல் போக, 45 சதவீத கரும்புகளை வெளியில் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்தால் கரும்பு முழுமையாக விற்பனையாகி விடும். நாங்களும் கொள்முதல் செய்வார்கள் என எதிர்பார்ப்பில் தான் இருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE