கரூர்: கரூர், கலெக்டர் அலுவலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில், குறு, சிறு நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன், நேற்று முன்தினம் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது, அவரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் விபரம்.
நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம்: ஜவுளி உற்பத்தி பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி, 5 சதவீதமாக உள்ளது. ஆனால், மூலப்பொருளான செயற்கை நூலுக்கு(பாலியஸ்டர்), 12 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக, 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கம்: கரூரில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மற்றும் டிசைனிங் இன்ஸ்டிடியூட் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இ.எஸ்.ஐ., மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். தொழிற்சாலை உரிமம் பெற கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க வேண்டும். காற்றாலையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தொழிற்சாலைகள் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச்சங்கம்: கரூர் மாவட்டத்தில், விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சந்தை ஏற்படுத்தி தர வேண்டும். கரூரை மாநகராட்சி தரம் உயர்த்த வேண்டும்.
க.பரமத்தி உழவர் உற்பத்தியாளர் குழு: நொய்யல் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எல்.பி.பி., பாசன கால்வாயிலிருந்து, 25ஆயிரம் ஏக்கர் நிலங்கள், தற்போது, வீட்டுமனைப்பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. எனவே, ஆத்துப்பாளையம் அணையில் இருந்து, இந்த வாய்க்கால் தண்ணீர் வழங்கினால், மீண்டும் விவசாய பணி மேற்கொள்ளலாம்.
முன்னோடி விவசாயி கலையரசன்: அரவக்குறிச்சி வட்டாரத்தில் முருங்கை சீசன் நேரத்தில் கிலோ, 2 ரூபாயாக விலை வீழ்ச்சியடைகிறது. நெல், கரும்பு போல முருங்கைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். செங்காந்தள் மலர்களை, நேரடியாக ஏற்றுதி செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE