போபால்:'அரசியல் கட்சிகள், வேளாண் நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர், புதிய வேளாண் சட்டங்களில் உள்ள அம்சங்களை அமல்படுத்தக் கோரி, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை தான், மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில விவசாயிகள் மத்தியில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று உரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:புதிய வேளாண் சட்டங்களை, ஒரே இரவில் மத்திய அரசு அமல்படுத்தி விடவில்லை. இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என, அரசியல் கட்சியினர், வேளாண் நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வாக்குறுதி
அதை தான், மத்திய அரசு தற்போது அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய சீர்திருத்த நடவடிக்கையால் கிடைக்கும் நற்பெயர், பா.ஜ., அரசை சென்றடைந்து விடக்கூடாது என, எதிர்க்கட்சியினர் நினைக்கின்றனர்.எனவே தான், விவசாயிகளை துாண்டிவிட்டு, அவர்களை தவறாக வழிநடத்தி, போராட்டத்தை தீவிரப்படுத்த முயல்கின்றனர்.
இந்த புதிய சட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில், இதே சட்டங்களை கொண்டு வருவோம் என, முன்னர் வாக்குறுதி அளித்துள்ளனர்.அவர்கள் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த சீர்திருத்தங்களை தான், நாங்கள் அமல்படுத்தி உள்ளோம். அதை, இப்போது எதிர்ப்பதற்கு என்ன காரணம் என, விவசாயிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் பிரச்னை, புதிய வேளாண் சட்டங்களை குறித்து அல்ல. இதன் காரணமாக, நான் நற்பெயர் பெற்றுவிடக் கூடாது என்பதே அவர்களின் அச்சம். எனக்கு நற்பெயர் வேண்டாம்; அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். விவசாயிகள் நலனே எனக்கு முக்கியம். அவர்களை தவறாக வழி நடத்துவதை கைவிடுங்கள். அது போதும்.புதிய வேளாண் சட்டங்களில் என்ன பிரச்னை உள்ளது என, திரும்ப திரும்ப கேள்வி எழுப்பி வருகிறோம். அதற்கு, எதிர்க்கட்சியினரிடம் சரியான பதில் இல்லை.விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை இழந்துவிடுவர் என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். அரசியலில் தங்களுக்கான இடங்களை இழந்தவர்கள், இப்படிப்பட்ட பொய்களை கூறி, விவசாயி களை குழப்புகின்றனர்.
அமல்
சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகள், எட்டு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாமல் கிடப்பில் கிடந்தன. விவசாயிகள் லாபம் அடைவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், அந்த அறிக்கையை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தினர். விவசாயிகளை, உணவு அளிக்கும் கடவுள்களாக நாங்கள் பார்க்கிறோம். அதனால் தான், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தினோம்.குறைந்தபட்ச ஆதரவு விலையை, உற்பத்தி விலையை விட, 1.5 மடங்கு அதிகம் அதிகரித்து உள்ளோம். குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். அறுவடைக்கு முன்பே, குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின், கொரோனா தொற்று காலத்திலும், குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாய விளைபொருட்களை அரசு வாங்கி உள்ளது.எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரத்தில், விவசாயிகள் அச்சம் கொள்ள தேவைஇல்லை. அதே போல, ஏ.பி.எம்.சி., எனப்படும், விவசாய விளைபொருள் சந்தை கமிட்டி விவகாரத்திலும் பொய் பிரசாரம் செய்யப்படுகிறது.ஏ.பி.எம்.சி., மண்டிகளில் அதிக விலை கிடைத்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அங்கேயே விற்பனை செய்யலாம்.கடந்த ஆறு மாதத்தில், ஒரு மண்டி கூட மூடப்படவில்லை. அவற்றை நவீனமயமாக்க, மத்திய அரசு, 500 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
நடைமுறை
விவசாயிகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்பது, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த வர்த்தகத்தில், தனியார் நிறுவனங்களை, அதிக பொறுப்புள்ளவர்களாக பிணைக்க, புதிய சட்டங்கள் வழிவகுக்குகின்றன.தனியார் நஷ்டத்தை சந்தித்தாலும் கூட, ஒப்பந்தத்தில் இருந்து விலக முடியாத அளவுக்கு, புதிய சட்டங்கள் அவர்களை கட்டுப்படுத்தும்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE