வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருக்கும் நிலையிலும், ராணுவத்தில் பணியாற்றி தேச சேவையாற்றி வரும் லெப்டினென்ட் மோனிஷா வின்சென்ட்: நான், சென்னை தமிழ்ப்பெண். ஆனால், என் வாழ்க்கை நதி போல, பல இடங்களில் தொடர்ந்தது. அப்பா, சிங்கப்பூரில் வேலை பார்த்ததால், அங்கு, ஆரம்பக்கல்வி படித்தேன்.பின், சென்னை திரும்பி, எஸ்.பி.ஓ.,வில் மேல்நிலைப்பள்ளி படிப்பை முடித்தேன். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் கிடைத்தது. என்னுடன் படித்த பலரும், டாக்டர், இன்ஜினியர் என விரும்பிய நிலையில், வழக்கமான இந்த வேலைகள் எனக்கு பிடிக்கவில்லை.சட்டம் படித்தால், சவாலாக இருக்கும் என நினைத்து, சட்டம் படிக்க சேர்ந்தேன். சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த போது, ராணுவ அறிவிப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது.ராணுவத்தில், ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் என்ற பதவிக்கு, விண்ணப்பம் கோரிஇருந்தனர். அதற்கு விண்ணப்பித்து, நேர்காணலுக்காக காத்திருந்த போது, பெங்களூரில் நேர்காணல் என அழைப்பு வந்தது.அங்கு சென்ற போது, பெரும் அதிர்ச்சி. பெரும் கூட்டம் கூடிஇருந்தது. எனினும், அங்கு வந்திருந்தவர்களில் நான் மட்டுமே தமிழ்ப்பெண். கண்டிப்பாக இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில், தேர்வை கடினமாக சந்தித்தேன். எதிர்பார்த்தது போலவே, தேர்வில் வெற்றி பெற்று விட்டேன்.
எனினும், அந்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாத அளவுக்கு, என் தம்பி, திடீரென இறந்து விட்டது, என்னை சோகத்தில் ஆழ்த்தியது. உடன் பிறந்த ஒரு தம்பியும் இறந்து விட்டான்; பெற்றோருடன் இருந்து, அவர்களை பார்த்துக் கொள்வது தான் சரி என மனது சொல்லியது.ஆனால், என் பெற்றோர், ஒரேயடியாக, எனக்கு ஆறுதல் கூறி, ராணுவ பயிற்சியில் சேர வலியுறுத்தினர். தம்பியின் இழப்பை தாங்கிக் கொண்டு, பயிற்சியில் தீவிரமாக இறங்கினேன்.
பயிற்சியில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுக்காவிட்டாலோ, உடல் நலத் தகுதி இல்லாவிட்டாலோ தேர்வு ஆக முடியாத சூழ்நிலை. என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்தவர்களுக்கு ஏற்கனவே, விளையாட்டில் ஆர்வம், அனுபவம் இருந்தது. எனக்கு அவ்வாறு இல்லை. இருந்த போதிலும், மனம் மற்றும் உடல் தகுதியை வளர்த்து, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, லெப்டினென்ட்
பதவியில் சேர்ந்து விட்டேன்.நம் ஊரில் இருந்து, மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பெண்கள், ராணுவத்திற்கு வருகின்றனர். இந்தப் பணி உன்னதமானது. வாழ்க்கையில் ஒழுக்கம், பாசிட்டிவ் எண்ணம், தடைகளை தாண்டி முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் இந்த துறையில் மட்டுமே இருக்கிறது. எனவே, நிறைய பெண்கள், ராணுவத்தில் சேர வர வேண்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE