இன்று முதல் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதாக, முதல்வர் இ.பி.எஸ்., திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தன் சொந்த ஊரான இடைப்பாடியில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, அடுத்தாண்டு நடைபெற உள்ள, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற, பிள்ளையார் சுழி போடுகிறார்.
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 லோக்சபா தேர்தலின் போது அமைக்கப்பட்ட கூட்டணி, தற்போதும் தொடர்வதாக, அ.தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.
அறிவிக்கவில்லை
ஆனால், அதன் கூட்டணியில் உள்ள, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகள், இன்னமும் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., எவ்வளவு, 'சீட்' தருகிறது என்பதை பார்த்த பின், முடிவெடுக்கலாம் என, காத்திருக்கின்றன.
தி.மு.க., கூட்டணியிலும், அதே நிலை தான் காணப்படுகிறது. எனினும், கட்சி துவக்கப் போவதாக, ரஜினி அறிவித்துள்ளதால், அதிர்ச்சி அடைந்துள்ள தி.மு.க., தலைமை, தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி, இளைஞர் அணி செயலர் உதயநிதி போன்றோர், பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.ஆளும் கட்சியான அ.தி.மு.க., சார்பில், முதல்வர் இ.பி.எஸ்., ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
ஆலோசனை
நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை, மாவட்டம் தோறும் துவக்கி வைத்தார். அப்போது, மாவட்ட செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளையும், அமைச்சர்கள் மற்றும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களையும் அழைத்துப் பேசி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டார்.
இந்நிலையில், நேற்று சேலம் சென்ற முதல்வர், அம்மாவட்ட நிர்வாகிகளுடன், அவசர ஆலோசனை நடத்தினார். அந்த சூட்டோடு, இன்று முதல் தேர்தல் பிரசாரத்தை துவக்கப் போவதாக, திடீரென அறிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலுாரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின், நிருபர்களிடம் முதல்வர் கூறியதாவது:
லாரி உரிமையாளர்கள் போராட்டம் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் தெளிவாக கூறி உள்ளார். செல்லுமிடத்தை அறியக்கூடிய, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தும் திட்டம், மத்திய அரசு கொண்டு வந்தது. தரமான நிறுவனங்களிடம் இருந்து, அந்த கருவியை வாங்க வேண்டும். இங்கு தான் வாங்க வேண்டும் என, நிர்பந்தப்படுத்தவில்லை.
உறவு தொடரும்
சமையல் காஸ் விலையை குறைக்கக் கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். லோக்சபா தேர்தலின் போது, கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் உறவு தொடரும். மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலத்தை கொடுத்து விட்டோம். மின் துறை தனியார் மயமாக்கப்படாது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஊராட்சி, பெரியசோரகை சென்றாயப்பெருமாள் கோவிலில், இன்று தரிசனம் செய்து விட்டு, 2021 சட்டசபை பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்குகிறேன். பல இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால், தொகுதிக்கு வர முடியாத சூழல் உள்ளது. மேலும், குறைந்த நாட்களே உள்ளன. எனவே, கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, என் தொகுதியில், பிரசாரத்தை துவக்குகிறேன்.
இவ்வாறு, முதல்வர் கூறினார்.
திடீரென இன்று முதல், தேர்தல் பிரசாரத்தை துவக்குவதாக, முதல்வர் அறிவித்தது, அனைத்து தரப்பிலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தன் சொந்த ஊரான இடைப்பாடியில், பிரசாரத்தை துவக்கும் முதல்வர், இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் பிரசார அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது.
'ஒரு நாளும் இருந்ததே கிடையாது!'
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 'மினி கிளினிக்' என்ற சுகாதார மையங்களை, முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்து பேசியதாவது:ஜெ., அறிவித்ததை, அரசு நிறைவேற்றி வருகிறது. கர்ப்பிணியருக்கு, சிசு நன்றாக வளர, தாய் சேய் பெட்டகம் வழங்கப்படுகிறது. குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதை தடுக்க, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.
நம் மாவட்டம், முதல்வர் மாவட்டம் என்று, பெருமை கொள்ளும் வகையில் உள்ளது. வேறு மாவட்ட முதல்வராக இருந்தால், முத்துநாயக்கன்பட்டிக்கு வருவாரா; நான், பலமுறை இங்கு வந்து பேசியுள்ளேன். அப்போது, எப்படி இருந்தேனோ, அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை, உங்களுக்கு பணி செய்வற்கான, பொறுப்பை தந்துள்ளனர். நான் ஒரு நாளும், முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது; இருக்கப் போவதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வது, உயர்ந்த பணி. அப்பணியை, சிந்தாமல் சிதறாமல், நீங்கள் நினைப்பதை நிறைவேற்றும் முதல்வராக இருப்பேன். என் முன் நிற்கிற அனைவரையும் முதல்வராக பார்க்கிறேன். நீங்கள் கொடுத்த பணியை, சிறப்பாக செய்து, நம் மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பேன்.நான் சிறுவனாக இருக்கும் போது, ஊசி போட, 17 கி.மீ., துாரமுள்ள இடைப்பாடிக்கும், 24 கி.மீ., துாரமுள்ள பவானிக்கும் போக வேண்டும். அப்படிப்பட்ட நிலை, தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக, 'மினி கிளினிக்' துவக்கப்பட்டுள்ளது.
தி.மு.க.,வினர் சுயநலவாதிகள். தன் குடும்பம் தான் வாழ வேண்டும் என, எண்ணுகிறவர்கள். தி.மு.க.,வில், தலைவர் முதல் தொண்டர் வரை, அப்படி தான் இருக்கின்றனர். அ.தி.மு.க.,வில் உழைக்கிறவர்கள் பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருக்கிறவர்கள், உயர்ந்த நிலைக்கு வர முடியும். உழைக்கிறவர்களை மக்கள் மதிப்பர். அ.தி.மு.க., அரசு, மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும்.எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வாரிசு கிடையாது; மக்கள் தான் வாரிசு. நாட்டு மக்களை குழந்தையாக எண்ணி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டினர். அவர்கள் செயல்படுத்திய அத்தனையும் உயிரோட்டமுள்ள திட்டங்கள். .இவ்வாறு, முதல்வர் பேசினார்.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE