சென்னை :''மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான இடங்கள் தொடர்பான, அனைத்து ஆவணங்களையும், மத்திய அரசுக்கு அளித்துள்ளோம்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, கிண்டியில் உள்ள, ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மாணவர்கள், பணியாளர்கள் என, 191 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல், அண்ணா பல்கலையில், ஆறு மாணவர்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டது.
வழியனுப்பும் நிகழ்ச்சி
அவர்கள் அனைவரும், சென்னை, கிண்டி, கிங் ஆய்வக வளாகத்தில் உள்ள, அரசு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், இயக்குனர் நாராயணசாமி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
இதில், தொற்றில் இருந்து குணமடைந்த, 28 மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அதில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவர்களிடம் நலம் விசாரித்தார். பின், அனைவரும் பஸ் வாயிலாக, ஐ.ஐ.டி.,யில் உள்ள, பத்ரா என்ற தனி விடுதிக்கு அனுப்பப்பட்டனர். சில தினங்களுக்கு, விடுதியில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னையில், 97 கல்லுாரிகளின், 161 விடுதிகளில் பரிசோதனை செய்துள்ளோம். அதில், 6,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நடந்த பரிசோதனையில், 4,000க்கும் மேற்பட்டோரின் முடிவுகள் வந்துள்ளன. அதில், 210 மாணவர்களுக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.,யில், 'வாக் இன்' பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அறிகுறிகள் இருப்பவர்கள், பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், ஐ.ஐ.டி., மற்றும் மாநகராட்சி சார்பில், தனி மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலையில், 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். பரிசோதனைகளை குறைக்க வேண்டாம் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி தினமும், 11 ஆயிரம் அளவில் பரிசோதனை மேற்கொண்டு வருகிறது. மார்க்கெட் பகுதிகளில், தீவிரமாக பரிசோதனை செய்கிறோம்.
மாநிலத்தில், கொரோனா தொற்று பரவல் விகிதம், 2 சதவீதத்துக்கு கீழ் உள்ளது; சென்னையில், 3.5 சதவீதத்துக்கு கீழ் உள்ளது. இதுபோன்ற நேரத்தில் தான், டில்லி, ஐரோப்பாவில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது.
கடந்த வாரம், 0.86 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம், தற்போது, 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை, ஒரு சதவீதத்துக்கு கீழ் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று குறைகிறது; தடுப்பு மருந்து வருகிறது என்ற காரணத்தால், யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எல்லா துறைகளுக்கும், பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறது.
செய்தி தவறானது
மதுரை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என்ற, செய்தி தவறானது. 'சர்வே நம்பர்' வாரியாக, அனைத்து ஆவணங்களையும், அரசு கொடுத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூறியது குறித்து, மத்திய சுகாதாரத் துறை செயலர், எய்ம்ஸ் நிர்வாகத்திடம் பேசியுள்ளேன். அரசிடம் இருந்த நிலத்தை தான் வழங்கியுள்ளோம்.
அங்கு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. அனைத்து விதத்திலும், தமிழக அரசு தயாராக உள்ளது.
'மினி கிளினிக்' திட்டத்தால், அரசு டாக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்குமா என, அவர்களின் கருத்துகளை கேட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மினி கிளினிக்குகளில், 835 டாக்டர்கள், புதிதாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE