புதுடில்லி:''இந்தியா, எதிர்காலத்தில் நடக்கும் போர்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாடங்களை பயன்படுத்தி வெற்றி பெறும்,'' என, முப்படை தலைமை தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டில்லியில், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிபின் ராவத் பேசியதாவது:நாடு, இன்று, வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இத்தகைய சவால்களை சமாளிக்க, உள்நாட்டில் தயாரிக்கக் கூடிய போர் கருவிகளை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகம் வடிவமைத்து தருகிறது.வரும் காலத்தில் போர் மூண்டால், முப்படையினரும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் நவீன போர்க் கருவிகளை பயன்படுத்தி வெற்றி பெறுவோம்.
மத்திய அரசு, ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில், தனியார் துறையை அனுமதித்துள்ளது. இத்துறைக்கு தேவையான போர்க் கருவிகளை, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகம் வடிவமைத்து தர வேண்டும். ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில், ஏற்கனவே, 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போர்க் கருவிகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதில், 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ், 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படும்.
இந்நிலையில், மேலும், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு போர்க் கருவிகளை கொள்முதல் செய்ய, இரு தினங்களுக்கு முன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதில், உள்நாட்டு தயாரிப்புகளின் பங்கு, 90 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE