திருத்தணி : திருத்தணியில் நான்கு மாதங்களாக, 'அம்மா' சிமென்ட் கிடைக்காததால், பயனாளிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி தாலுகாவில், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொந்த வீடுகள் கட்டுவதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு மூலம், அரசு சலுகை விலையில், அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சிமென்ட் மூட்டை, 190 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதியதாக வீடுகள் கட்டுபவர்களுக்கு, 100 சதுரடிக்கு, 50 மூட்டைகள் வீதம், அதிகபட்சமாக, 1,000 சதுரடி வரை, 500 மூட்டைகள் சலுகை விலையில், பெறலாம்.இந்த சிமென்ட் பெறுவதற்கு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சிமென்டிற்கான தொகையை இந்தியன் வங்கியில், அரசு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.
பணம் செலுத்தியவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் சிமென்ட் வழங்கப்படும்.இந்நிலையில், நான்கு மாதமாக, 200க்கும் மேற்பட்டோர் சிமென்ட் கேட்டு பதிவு செய்துஉள்ளனர். ஆனால், இன்று வரை, சிமென்ட் கிடைக்காததால் வீடுகள் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுஉள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:நம் தாலுகாவிற்கு, கும்மிடிப்பூண்டியில் இருந்து, சிமென்ட் வர வேண்டும். சிமென்ட் தயாரிக்கும் கம்பெனியில், மூலப் பொருட்கள் பற்றாக்குறை, கொரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் குறித்த நேரத்தில் சிமென்ட் வழங்க முடியவில்லை.தற்போது, 12 ஆயிரம் சிமென்ட் மூட்டைகள் பயனாளிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE