திருவள்ளூர் : 'பூண்டியில் இருந்து, சோழவரம் ஏரிக்கு, கூடுதல் தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், பேபி கால்வாய், ஆழம் மற்றும் அகலப்படுத்தி, மேம்படுத்தப்பட உள்ளது' என, தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் தெரிவித்தார்.
சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட, பூண்டி நீர்த்தேக்கத்தில் சேகரமாகும் தண்ணீர், பேபி கால்வாய் மற்றும் இணைப்பு கால்வாய் வழியாக, முறையே, சோழவரம் மற்றும் புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்த நிலையில், பூண்டி பேபி கால்வாய் மற்றும் அணைக்கட்டு பகுதிகளை நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்தியகோபால், கலெக்டர் பொன்னையாவுடன், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின், சத்தியகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பூண்டி பேபி கால்வாயில் இருந்து, சோழவரம் ஏரிக்கு, தற்போது, குறைந்த அளவில் தான் தண்ணீர் செல்கிறது.கால்வாயை ஆழம் மற்றும் அகலப்படுத்தி, கூடுதல் மழை நீரை எடுத்து செல்லும் வகையில், கட்டமைப்பு பணி மேம்படுத்தப்பட உள்ளது. இதனால், கோடைக் காலத்தில், சென்னை மக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய ஏதுவாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.
பின், கல்பட்டு அணை கட்டுமான பணி, தாமரைப்பாக்கம் அணைக்கட்டு மற்றும் மேல்வரத்து கால்வாய் ஆகியவற்றையும் பார்வையிட்டனர். உடன், பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE