சென்னை:'சென்னை, சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோ அரங்கில், ஒரு நாள் தியானம் செய்ய, இளையராஜாவை ஏன் அனுமதிக்க கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு கூடம் உள்ளது. அதை, 35 ஆண்டுகளாக, இசை அமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்டுக் கொண்டது.இந்நிலையில், தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், ஒலிப்பதிவு கூடத்தில், ஒரு நாள் தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார்.
மேலும், 50 லட்சம்ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார். இவ்வழக்கு, நீதிபதிசதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.பிரசாத் ஸ்டுடியோ சார்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ''ஒலிப்பதிவு அரங்கம் இருந்த இடத்தில், மென்பொருள் நிறுவனம் செயல்படுகிறது. இளையராஜாவின் உடைமைகள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, அவர் எடுத்து செல்லலாம்,'' என்றார்.
இளையராஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ''இவ்வளவு ஆண்டுகள், இசை அமைத்த இடத்தில், ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் கைப்பட எழுதியுள்ள குறிப்புகள், இசை கருவிகள், பெற்ற விருதுகள், அங்கு தான் உள்ளன,'' என்றார். இதையடுத்து, நீதிபதி, 'ஒரு நாள் அங்கு சென்று தியானம் செய்வதால், உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது; அங்கு, பல ஆண்டுகள், அவர் இருந்துள்ளார்.
உதாரணத்திற்கு, எதிரியே வீட்டிற்கு வந்தாலும், அவரை வெளியே அனுப்புவது, நம் கலாசாரம் அல்ல. 'ஒரு நாள், அங்கு உட்கார்ந்து தியானம் செய்ய போகிறார். அவரை ஏன் அனுமதிக்க கூடாது?' என, கேட்டார்.உடனே, மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இதுகுறித்து, நிர்வாகத்தினரிடம் பதில் பெற்று தெரிவிப்பதாக கூறினார்.
அப்போது, நீதிபதி, 'இரு தரப்பு வழக்கறிஞர்களும், அவருடன் செல்லலாம். ஸ்டுடியோ நிர்வாகத்தினரை, மூத்த வழக்கறிஞர் சம்மதிக்க வைப்பார் என, நம்புகிறேன்' என்றார். இதையடுத்து, விசாரணையை, வரும், 21ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE