காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 14.66 கோடி ரூபாய் செலவில், புதிதாக கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு அரங்க பார்வையாளர் கூடம், ஏழு மாதங்களிலேயே, சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம், சிதிலமடைந்த நிலையில் இருந்தது.இதையடுத்து, 2018ல், 14.66 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்கம் கட்டும் பணி துவங்கப்பட்டது.இதில், 1,500 பேர் அமர்ந்து, விளையாட்டு போட்டிகளை காணும் வகையில் பார்வையாளர் கூடம், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்குவதற்கான தனித்தனி அறைகள், உணவுக்கூடம், உடை மாற்றும் அறை என, பல வசதிகளுடன், நவீன மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதை, மே மாதம், முதல்வர் இ.பி.எஸ்., காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், பார்வையாளர் கூடத்தின் ஒரு பகுதியில், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து உள்ளதோடு, விரிசலும் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.கோடி கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன விளையாட்டு மைதானத்திற்கு, ஆயிரக் கணக்கானோர் வந்து செல்வர்.பல ஆண்டுகளுக்கு உறுதியுடன் நீடித்து நிலைக்க வேண்டிய நிலையில், திறப்பு விழா நடத்தப்பட்ட, ஏழு மாதங்களிலேயே சிதிலமடைய துவங்கியுள்ளதால், விளையாட்டு அரங்கத்தின் உறுதித்தன்மையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE