கஞ்சா விற்ற 6 பேர் சிக்கினர்
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் ஏரிக்கரையில், இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக செம்மஞ்சேரி போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, கண்காணிப்பில், நான்கு பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 50 கிராம் எடையுள்ள, 30 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், சோழிங்கநல்லுார், படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணகுமார், 22, செல்வம், 19; கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த விஜய், 21; திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி, 24, என்பது தெரிய வந்தது.
l எழும்பூர்: எழும்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 'ஆல்பர்ட்' திரையரங்கம் அருகே, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றவரை, பிடித்து விசாரித்தனர்.இதில், மதுரவாயலைச் சேர்ந்த சுரேஷ், 38, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
l காசிமேடு: காசிமேடு, நாகூரான் தோட்டம் பகுதியில், படகு கட்டும் இடத்தில், மர்ம நபர்கள் கஞ்சா விற்று வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த இடத்தை, ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்பகுதியில், நேற்று காலை, 7:30 மணியளவில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, வண்ணாரப்பேட்டை, பல்லவன் நகரைச் சேர்ந்த குப்பன், 52, என்பவரை, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து, 1 கிலோ கஞ்சா, பறிமுதல் செய்யப்பட்டது.
பீரோ உடைத்து 3 சவரன் 'அபேஸ்'
வியாசர்பாடி: வியாசர்பாடி, மெகசின்புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 30; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அம்பிகா, 26. இருவரும், நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினர்.அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த, செயின், மோதிரம் என, 3 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, சதீஷ்குமார் வியாசர்பாடி குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருட்டில் ஈடுபட்ட இருவர் சிக்கினர்
ஓட்டேரி: ஓட்டேரி சுற்றுவட்டார பகுதிகளில், மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்தன. இது குறித்து, ஓட்டேரி போலீசார் விசாரித்தனர். இதில், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது, அண்ணாநகரைச் சேர்ந்த சூர்யா, 18 மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், தலா, ஐந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மொபைல் பறிப்பு வாலிபர் கைது
கோயம்பேடு: கோயம்பேடு பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி இருந்த நபரை, கோயம்பேடு போலீசார் மடக்கி விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டவர், எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த விஜி, 21, என்பதும், இவர், கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து, மொபைல் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, விஜியை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE