மதுரை : ஜவுளிக் கடைகள், ஓட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், திருமண மண்டபங்களில் தீ தடுப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தீபாவளியன்று (நவ.,14) மதுரை தெற்குமாசி வீதி அருகில் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடம் சிதைந்ததால் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து மதுரையில் 112 கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தீயணைப்புத் துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். பல்வேறு பொதுக்கட்டடங்களுக்கு தீயணைப்புத் துறையின் உரிமச் சான்று இல்லை. பல கட்டடங்களுக்கு உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
ஜவுளிக் கடைகள், ஓட்டல், ஷாப்பிங் மால், தியேட்டர், திருமண மண்டபங்களில் தீ தடுப்பு சாதனங்கள் உள்ளதா என்பதை தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யாமல் கட்டடங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு தமிழக உள்துறை செயலாளர், தீயணைப்புத்துறை இயக்குனர், துணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE