கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக பெய்யும் தொடர் மழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு கிழக்கே வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் மழை பெய்கிறது.கடலுார் மாவட்டத்தில் 16ம் தேதி 4.7 செ.மீட்டர் மழை பெய்த நிலையில் 17 ம் தேதி 10 செ.மீட்டர் மழை பாதிவாகியது. மூன்றாம் நாளான நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று முன்தினம் இரவு 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 வரையில், புவனகிரியில் 105 மி.மீ., பரங்கிப்பேட்டை 62; காட்டுமன்னார்கோவில் 55; சிதம்பரம் 36.8; லால்பட்டை 32; சேத்தியாத்தோப்பு 26.2; கொத்தவாச்சேரி 21 ; வானமாதேவி, 16; பண்ருட்டி 8 ; உட்பட மாவட்டம் முழுவதும் 438 மீ.மீட்டர் மழை பதிவானது.
மூன்றாவது நாளாக தொடர்ந்த மழையால் கடலுாரில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேதாஜி சாலை, முதுநகர் உள்ளிட்ட நகர பகுதி சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. தாழ்வான பகுதிகளில் நகராட்சி மூலம் மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.மாவட்டத்தில் நீர் நிலைகள் நிரம்பி, பெண்ணையாற்றில் தண்ணீர் வருவதால், வழியில் உள்ள கும்மந்தான்மேடு, மருதாடு உள்ளிட்ட பகுதி தடுப்பணைகள் நிரம்பியுள்ளது.ஏற்கனவே விவசாய பயிர்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வரும் நிலையில், மீண்டும் துவங்கியுள்ள மழையால் விவசாயிகள் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE