சமையல் எண்ணெயை உதிரியாக விற்கத் தடை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமையல் எண்ணெயை உதிரியாக விற்கத் தடை

Added : டிச 19, 2020
Share
மதுரை : சில்லரை அடிப்படையில் உதிரியாக (பேக்கிங் செய்யாத) சமையல் எண்ணெய் விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது. உணவுப் பொருள் கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஏன் சட்டத்திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. மேலுார் வழக்கறிஞர் அருண்நித்தி தாக்கல் செய்த பொதுநல மனு:சமையல் எண்ணெயில் முந்திரித் தோலில்

மதுரை : சில்லரை அடிப்படையில் உதிரியாக (பேக்கிங் செய்யாத) சமையல் எண்ணெய் விற்பனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.

உணவுப் பொருள் கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஏன் சட்டத்திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. மேலுார் வழக்கறிஞர் அருண்நித்தி தாக்கல் செய்த பொதுநல மனு:சமையல் எண்ணெயில் முந்திரித் தோலில் தயாரித்த எண்ணெயை கலப்படம் செய்கின்றனர். இது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட நோய்கள் ஏற்படுகின்றன.உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி எண்ணெயை சில்லரை அடிப்படையில் உதிரியாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்துதான் விற்க வேண்டும்.

கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக்கூடாது என சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்படும் தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அருண்நித்தி குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு:முந்திரித் தோலிலிருந்து எண்ணெயை பிரித்தெடுக்கும் 50 யூனிட்கள் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுகிறது. இதை கண்காணிக்க எவ்வித வழிகாட்டுதலும் இல்லை. பிசின், பெயின்ட், வார்னிஸ் தயாரிக்க பயன்படும் முந்திரித்தோல் எண்ணெயை பாமாயிலுடன் கலப்படம் செய்து நல்லெண்ணெய் என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

உதிரியாக சில்லரை அடிப்படையில் விற்கும் சமையல் எண்ணெயில்தான் அதிக கலப்படம் நடக்கிறது. இதை உணவுப் பாதுகாப்புச் சட்டம் தடை செய்துள்ளது என மனுதாரர் தரப்பு கூறுகிறது.அரசுத் தரப்பு,'மதுரை மாவட்டத்தில் 230 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அதை பகுப்பாய்வு செய்தில் 194 முடிவு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதில் 51 மாதிரிகள் பாதுகாப்பற்றவை, 88 தரமற்றவை/தவறான பிராண்ட் உள்ளவை, ' என கூறுகிறது.உதிரிக்குத் தடை:அத்தியாவசிய உணவுப் பொருளான சமையல் எண்ணெயில் கலப்படம் என்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதனால் மக்களின் உடல் நலம் பாதிக்கிறது. மக்களுக்கு ஆரோக்கியமான உணவு, கலப்படமின்றி கிடைப்பதை அரசியல் சட்டப்படி அரசு உறுதி செய்ய வேண்டும். சில்லரை அடிப்படையில் உதிரியாக (பேக்கிங் செய்யாத) சமையல் எண்ணெயை எவ்விதத்திலும் விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.குண்டர் சட்டம்மத்திய, மாநில அரசுகளிடம் இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது.

சமையல் எண்ணெயை உதிரியாக விற்பனை செய்வதை உணவுப் பாதுகாப்பு சட்டம் தடை செய்துள்ள நிலையில், எப்படி அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறது, பாமாயிலுடன் முந்திரித் தோல் எண்ணெயை கலந்தால் நல்லெண்ணெய் போல் மாறுவதாக கூறுவது சரியா, நிலக்கடலை சாரத்துடன்(எசன்ஸ்) ஒலின் ஆயில் கலந்தால் கடலை எண்ணெய்போல் மாறுவதாக கூறுவது சரியா, இதற்கு அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து விளக்கமளிக்க வேண்டும்.

கலப்படமானது நுகர்வோரின் உடல் நலனில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது. சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எத்தனை அரசு, தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளன, மாநிலம் முழுவதும் 5 ஆண்டு களில் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மாதிரிகள் எத்தனை, அதன் முடிவுகள், முந்திரித்தோல் எண்ணெய், நிலக்கடலை சாரம் கலந்திருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளதா, கலப்படத்தில் ஈடுபட்டோர் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது, 5 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அதில் தண்டனை விகிதம், உணவுப் பொருள் கலப்படத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் மாநில அரசு ஏன் சட்டத்திருத்தம் செய்யக்கூடாது என்பதற்கு மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தலைமை செயல் அலுவலர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஜன.,18 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X