சென்னை : சென்னையில், விதிகளை மீறி மின் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட முறைகேட்டை தடுக்க, தலைமை அலுவலகத்தில் உள்ள தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்களை, வாரந்தோறும், பிரிவு அலுவலகங்களுக்கு ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
சென்னையில், பல இடங்களில், விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு, முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. பல வீடுகளில், அதிக மின் கட்டணத்தை தவிர்க்க, கூடுதல் மின் இணைப்பு பெற்றுள்ளனர். மேலும், மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள கட்டடங்களில், மின்சாரமும் துண்டிக்கப்படாமல் உள்ளது. இதனால், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மின் சாதனங்களும் முறையாக பராமரிக்கப்படாததால், மின் தடை, மின் விபத்து நடப்பது தொடர் கதையாகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண, தலைமை அலுவலக பொறியாளர்களை, பிரிவு அலவலகங்களில் ஆய்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தலைமை அலுவலகத்தில், அதிக எண்ணிக்கையில், தலைமை மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள், தினமும் அலுவலகம் வந்து, வழக்கமான நிர்வாக பணிகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களில், தலா, ஒருவருக்கு, வாரத்திற்கு ஒரு பிரிவு அலுவலகத்தை ஒதுக்கி, அங்குள்ள ஊழியர்களின் வருகை பதிவு, மின் கட்டண வசூல், மின் வினியோகம் என, அனைத்து பணிகளையும் ஆய்வு செய்ய, உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.அவர்களிடம் அறிக்கை பெற்று, முறைகேடில் ஈடுபடுவோர் மீது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், பிரிவு அலுவலகங்களில் நடக்கும் முறைகேடை தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE