மதுரை : அடையாளம் தெரியாதோர் இறந்தால் கைரேகை அடிப்படையில் ஆதார் மூலம் அடையாளம் காண நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அடையாளம் தெரியாத உடல்கள் அரசு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. சில நாட்களுக்குப் பின் தகவலறிந்து இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் வரும்போது, உடலை அடையாளம் காண அரசுத் தரப்பில் ஒத்துழைப்பதில்லை.கைரேகை அடிப்படையில் ஒருவரின் ஆதார் மூலம் இறந்த, கொலை மற்றும் விபத்திற்குள்ளானவர்களை அடையாளம் காண முடியும்.
ஆனால் இறந்தவரின் கைரேகை அடையாளத்திற்குரிய ஆதார் எண் கேட்டு, ஆதார் வழங்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்திடம் போலீசார் விண்ணப்பிப்பதில்லை. இதனால் இறந்தவர்களின் குடும்பத்தினர் இழப்பீடு, இன்சூரன்ஸ், வாரிசு வேலை பெற முடியவில்லை. சொத்துக்கள் வாரிசுகளுக்கு சென்றடைய தாமதம் ஏற்படுகிறது. குற்றவாளிகள் தப்பிக்கின்றனர். அடையாளம் தெரியாதோர் இறந்தால் கைரேகை அடிப்படையில் ஆதார் மூலம் அடையாளம் காண உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், தமிழக உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,19 க்கு ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE