ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் உள்ள பெரிய ஏரியில் 50 ஏக்கர் பரப்பளவில் 9 கிணறுகளுடன் விவசாயம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.
ரிஷிவந்தியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 175 ஏக்கர் பரப்பிலான பெரிய ஏரி உள்ளது. அருகில் உள்ள வனப்பகுதியில் மழைநீர், இந்த ஏரிக்கு வரும் வகையில் நீர் வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் பெரிய ஏரி நிரம்புவதன் மூலம் அருகில் உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பயனடையும். மேலும், உபரி நீர் அருகில் உள்ள வெங்கலம், முனிவாழை, உன்னேரி, பிரிவிடையாம்பட்டு, காட்டுஎடையார் ஆகிய கிராம ஏரிகளுக்கு தண்ணீர் சென்று, கெடிலம் ஆற்றில் கலக்கும்.சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால், ஏரி வறண்டது.
இதையொட்டி அப்பகுதியில் விளைநிலம் வைத்துள்ள சிலர், ஏரியினை ஆக்கிரமித்து பயிர் செய்ததுடன், ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்காலையும் ஆக்கிரமித்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பெய்த கன மழையினால், வனப்பகுதியில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. அங்கிருந்து ஏரிக்கு தண்ணீர் செல்ல வழியில்லாததால், அருகில் உள்ள அரியந்தக்கா ஊருக்குள் புகுந்தது.இதையொட்டி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வருவாய் ஆய்வாளர் சரவண சக்தி, வி.ஏ.ஓ., சைமன்குமார், நில அளவையாளர்கள் ஜெயவேல், வேல்முருகன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நாராயணன் ஆகியோர் பெரிய ஏரிக்குச் சென்று ஆய்வு நடத்தினர்.அதில், ஏரியின் 50 ஏக்கர் பரப்பிலான பகுதியினை 40 பேர் ஆக்கிரமித்து பயிர் செய்திருப்பது தெரியவந்தது.
மேலும் விவசாய 9 கிணறுகளும் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிக்காக ஏரியின் எல்லை அளக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டது. தொடர்ந்து, வரும் 23ம் தேதி முனிவாழை, 28ம் தேதி ஏந்தல் ஏரி வாய்க்கால், ஜனவரி 6ம் தேதி சாத்தப்புத்துார் ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கண்துடைப்பு நாடகமா...மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே பெரிய ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். இந்நிலையில், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல மழை பெய்து பாதிப்பு ஏற்படும்போது ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்துள்ளனர். அதுவும் கண் துடைப்பாக ஒரு இடத்தில் பள்ளம் எடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.
இதனால், ஆக்கிரமிப்பு விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். கோரிக்கை விடுத்த விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். முழுமூச்சுடன் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாத வகையில், எல்லைக் கல் அமைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE