கோவை:பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகளை பெறுவதற்காக, மண்டல வாரியாக மாநாடு நடத்துவது என்று, கோவையில் நடந்த கூட்டமைப்பு ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில், கோவையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. 143 சமூக பிரதிநிதிகள் பங்கேற்று, 'பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் உரிமையை மீட்போம்' என, உறுதி ஏற்றனர்.ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி பேசுகையில், ''பிற்படுத்தப்பட்டோர், இடஒதுக்கீட்டின் உண்மையான பயனை பெற முடியவில்லை.
இந்த பிரிவினர் உரிமைகளை பற்றி குரல் கொடுக்க அரசியல் கட்சி எதுவும் இல்லை. அரசியல் சாராத பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தி, நம் உரிமைகளை நாமே மீட்போம்,'' என்றார்.முதல்வர் அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையானதாக இருக்க வேண்டும், கணக்கெடுப்பு அலுவலர்களின் சமூக விபரங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும், கணக்கெடுத்த பின், தாலுகா, வார்டு, நகரம், மாநகரம் வாரியாக அனைத்து விபரங்களும் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டமைப்பு சார்பாக, 15 நாளுக்கு ஒரு முறை ஒரு மாவட்ட தலைநகரில் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது என்றும், முதல் மண்டல மாநாடு ஜன., முதல் வாரம் திருச்சி, இரண்டாம் மாநாடு ஜன., இறுதி வாரம் மதுரை, பிப்., முதல் வாரம் சேலம், இறுதி வாரம் சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.கொங்குவேளாளர் அமைப்பு சார்பில் ரத்தினசபாபதி, முக்குலத்தோர்-மாரியப்பன், செட்டியார்-சிவக்குமார், நாடார்-சந்திரசேகரன், நாயுடு-குணசேகரன், வேளாளர்-பிரபு, ரெட்டியார்-ஜனகராஜ், முதலியார்-அசோக், யாதவர்-டாக்டர் காந்தையா, ஒக்கலிகர்-வெள்ளிங்கிரி, தம்பு உள்பட பல்வேறு ஜாதி அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE