கோவை;மூலப்பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் பவுண்டரிகளுடன், அதனை சார்ந்திருக்கும் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் கை கோர்க்க பரிசீலிப்பதால், கோவை தொழில்துறை ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது.கோவை மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. இந்நிலையில், பிக் அயர்ன், ஸ்கிராப் போன்ற மூலப்பொருட்களின் விலை, 35 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகக்கூறி கடந்த, 16ம் தேதி முதல் கோவை குறு, சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கத்துக்கு (காஸ்மாபேன்) உட்பட்ட, 400 பவுண்டரிகள், ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன.இதற்கு, 'காட்மா' சங்கமும் ஆதரவு தெரிவித்து, கடந்த, 16ம் தேதி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களை கதவடைத்து போராட்டம் நடத்தியது. தொடர்ந்து, கோவை பவுண்டரி, இண்டஸ்ட்ரி உரிமையாளர் சங்கமும்(கோபியா), 123 பவுண்டரிகளை நேற்று ஒரு நாள் மூடின.பல கோடி ரூபாய்க்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுவரும் நிலையில், 19 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான, 'போசியா'வும் போராட்டத்தில் கை கோர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த அமைப்பும் இறங்கினால், கோவை தொழில்துறை ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. இதனால், விலையேற்ற பிரச்னைக்கு, அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.நேரடி கொள்முதலுக்கு ஆலோசனை!மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன் கூறியதாவது:கோவையில் உள்ள தொழில் அமைப்புகள், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா(செயில்) நிறுவன அதிகாரி, இரும்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டம் நேற்று(நேற்று முன்தினம்) கொடிசியா வளாகத்தில் நடந்தது. இரும்பு பொருட்களை நேரடி கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.'கொடிசியா'வானது 'செயில்' உடன் புரிந்துணர்வு செய்து, 'பல்க் மெட்டீரியல்' பெற்று, கோரியவர்களுக்கு வழங்குவது தொடர்பாக, இதர தொழில் அமைப்புகளின் ஒப்புதல்களை பெற்று முடிவு செய்வதாக தெரிவித்துள்ளது. உறுதியாகும் பட்சத்தில், தேவையுள்ள நிறுவனங்கள் கொடிசியா மூலம், அப்போதைய விலைக்கு பெறும் வாய்ப்புள்ளது. ஆண்டுக்கு, 400 டன்னிற்கு மேல் பொருட்கள் வாங்குவோர் நேரடியாக, தங்களை தொடர்பு கொள்ளலாம் என 'செயில்' தெரிவித்துள்ளது. இதன்மூலம் விலையில் அதிக தள்ளுபடியும் கிடைக்கும். குறிப்பாக நெருக்கடி காலத்தில் இது பேருதவியாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE