கோவை;கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில், பரீட்சார்த்த முறையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், குழாய் இணைப்பு வழங்கும் பணியை துரிதப்படுத்த, கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.கோவையில், பழைய மாநகராட்சி பகுதியான, 60 வார்டுகளில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம், தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம், 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் ஆண்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்; 4 ஆண்டுகள் கட்டுமான பணி; மீதமுள்ள, 21 ஆண்டுகள், இயக்கி, பராமரிக்கப்படும் என, உறுதியளிக்கப்பட்டு உள்ளது.2018ல் 'பைலட்' திட்டமாக, பரீட்சார்த்த முறையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் மட்டும், இத்திட்டம் துவக்கி, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. குழாய் பதிக்கப்பட்டு, வீட்டு இணைப்புகள் வழங்கி, மீட்டர்கள் பொருத்தப்பட்டன.மூன்றாண்டுகள் உருண்டோடி விட்டதால், 24 மணி நேரமும் குடிநீர் கொடுக்க வாய்ப்பிருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
அதற்காக, ஆர்.எஸ்.புரத்தில், 22வது வார்டு ஒரு பகுதி, 23, 24, 25 ஆகிய வார்டுகளை சேர்ந்த, 6,000 இணைப்புகளுக்கு, 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், பரீட்சார்த்த முறையில், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, முடிவு செய்யப்பட்டுள்ளது.நேற்று கள ஆய்வு மேற்கொண்ட, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன், கூடுதல் பணியாளர்கள் நியமித்து, பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆர்.எஸ். புரத்தில், ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக, ஒரு நாள் விட்டு, ஒருநாள் வழங்க முயற்சிப்போம். பின், 24 மணி நேரமும் வழங்கப்படும். குழாயை எப்போது திறந்தாலும் தண்ணீர் வரும் என்கிற சூழல் உருவானால், தேவையான அளவு மட்டுமே உபயோகிப்பர். அதனால், இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE