திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், டாலர் மதிப்பில் கணக்கிடும்போது, கடந்த நவம்பர் மாதம் 1.19 சதவீதம் சரிவடைந்துள்ளது.கொரோனாவால் சரிவடைந்த இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், செப்., முதல் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நவம்பருக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக விவரங்களை வெளியிட்டுள்ளது.ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, வர்த்தகம் வளர்ச்சியையும், டாலரில் கணக்கிடும்போது சரிவையும், ஏற்றுமதி வர்த்தகம் சந்தித்துள்ளது.கடந்த 2019 - 20ம் நிதியாண்டின் நவ., மாதம், 7,544 கோடி ரூபாயாக இருந்த வர்த்தகம், நடப்பு ஆண்டில், 7,742.94 கோடியாக, ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, 2.64 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேநேரம், டாலர் மதிப்பில் கணக்கிடும்போது, ஏற்றுமதி வர்த்தகம், 1.19 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறையினர் கூறியதாவது:கடந்த ஆண்டு, 71.50 ரூபாயாக இருந்த ஒரு டாலர் மதிப்பு, தற்போது, 74 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதனாலேயே, ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்ததுபோல் தெரிகிறது.கொரோனா இரண்டாவது அலையால், ஐரோப்பிய நாடுகளில், இரண்டாவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதனால், நவ., மாதம், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிந்துள்ளது. கொரோனா தடுப்பூசி தயாராகிவருவதால், புது நம்பிக்கை பிறந்துள்ளது. வரும் மாதங்களில், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணிக்கும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE