உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ச.குமரவேல், பணி நிறைவு பெற்ற, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினியிடம் உள்ள வெளிப்படைத் தன்மை, பாராட்ட வேண்டிய அம்சம். இது, பொது வாழ்வில் ஈடுபடுவோருக்கு மிகவும் அவசியமாக இருக்க வேண்டும். 'எனக்கு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைக்கப்பட்டதால், பிரசாரம் செய்வதில் சிரமம் உள்ளது' என, தன் உடல்நிலை குறித்து, ரஜினி பகிரங்கமாக கூறியுள்ளார்.

அவருக்கு பணம், புகழ் ஏதும் இனி தேவையில்லை. அவர் நினைத்ததை விட, அதிகமாகவே அவற்றை பெற்றுள்ளார். இந்நிலையில், 'தமிழக மக்களுக்காக, என் உயிர் போனாலும் பரவாயில்லை' என, அவர் அரசியலில் இறங்கியுள்ளது, வரவேற்கத்தக்கது. ரஜினிக்கு தாடி நரைச்சுப் போச்சு, தலை வழுக்கையாப் போச்சு... ஆனால், இது எதையும் ரஜினி மறைக்கவில்லை. சுயமான தோற்றத்தில் தான், மக்கள் முன் நிற்கிறார். அது தான் ரஜினி! இந்த துணிச்சல், இதற்கு முன்னால் வெற்றி பெற்ற அரசியல்வாதிகளுக்கே இருந்ததில்லை. தமிழக அரசியல்வாதிகளே, தவறான பாதையில், இளைஞர்களை வழிநடத்தி செல்லும்போது, ரஜினி மட்டும் எதற்காகவும் பயப்படாமல், அந்த வழி தவறு என, உரக்க சொல்லியிருக்கிறார். அவரின் நேர்மைக்கு,
அதுவெல்லாம் சான்று. 'இளம் வயதில் சிகரெட், மது உட்பட விரும்பத்தகாத சில பழக்கங்களுக்கு ஆளானது உண்மை. அதனால் தான் சொல்றேன். இளைஞர்களே, எந்தவிதமான தீய பழக்கத்துக்கும் ஆளாகி விடாதீர். உங்கள் உடல் ஆரோக்கியம், பெற்றோரை கவனி' எனச் சொன்னவர், ரஜினி மட்டும் தான்.

'எதற்கெடுத்தாலும் போராடு, கலவரம் செய்' என, தன் ரசிகர்களை அவர் துாண்டிவிட்டதே இல்லை. தன்னம்பிக்கை அபாரமாக உள்ள மனிதன் தான், தன் பலவீனத்தை வெளிப்படையாக ஒப்புக் கொள்வான். ரஜினி, அப்படிப்பட்டவர். 'கட்சி வேறு; ஆட்சி வேறு. தேர்தலுக்குப் பின்,கட்சிப் பதவிகள் குறைக்கப்படும். நல்லாட்சி கொடுக்க முடியவில்லை என்றால், மூன்று
ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்' எனக் கூறிய, அவரின் நேர்மையும், துணிச்சலும் என்றென்றும் போற்றத்தக்கது! பெருந்தலைவர் காமராஜர் சொன்னதைப் போல, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடமிருந்து, தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ரஜினியின் ஆன்மிக அரசியல் வெல்ல வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE