சூலுார்:''பூஞ்சான கொல்லி உற்பத்தியில், கண்ணம்பாளையம் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது,'' என, வேளாண் உற்பத்தி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பாராட்டினார்.கோவை மாவட்டம், சூலுார் வட்டாரம் கண்ணம்பாளையம் விதைப்பண்ணையில், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம் செயல்படுகிறது. இங்கு 'டிரைக்கோ டெர்மா' எனும் உயிரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.உயிரி உற்பத்தி பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். நடப்பாண்டில், 15 ஆயிரம் கிலோ 'டிரைக்கோ டெர்மா' உயிரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை அலுவலர் புனிதவதி விளக்கினார்.தோட்டக்கலைத்துறை இயக்குனர் தலைமையில், துணை இயக்குனர் புவனேஸ்வரி வழிகாட்டுதல்படி, பூஞ்சான கொல்லி உற்பத்தி சிறப்பாக நடப்பதாக, வேளாண் உற்பத்தி கமிஷனர் பாராட்டினார்.நாட்டு ரக தக்காளி, கத்திரி, மிளகாயில் இருந்து விதைகளை பிரித்து எடுக்கும் இயந்திரங்கள், குழித்தட்டு நாற்றாங்கால் போட, விதைகள் நிரப்பும் இயந்திரங்களையும் பார்வையிட்டனர். மண்புழு உற்பத்தி, தேனீ வளர்ப்பு குறித்து கேட்டறிந்தனர். அனைத்து பணிகளை தொய்வில்லாமல் விரைந்து முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE