ஆனைமலை;வால்பாறை சட்டசபையில், இரு வேறு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த, 103 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி, மக்களிடம் விண்ணப்பங்கள் பெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறது.வழக்கமாக செப்., அல்லது அக்., மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும். நடப்பாண்டு கொரோனா பாதிப்பால், சட்டசபை வாரியாக, நவ., 21, 22 மற்றும், டிச., 12, 13ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.மேலும், ஆன்லைன், 'ஆப்லைன்' வாயிலாகவும், விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வால்பாறை சட்டசபையில் இதுவரை, 7,883 பேர் பெயர் சேர்த்தலுக்கும்; 5,347 பேர் நீக்கம் செய்யவும்; திருத்தத்துக்கு 1,320; இடம் மாற்றத்துக்கு 395 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.நடப்பாண்டு புதிய முயற்சியாக, சிறப்பு முகாம்கள் துவங்கியதும், 'டெமோகிரேடிக் சிமிலியர் என்ட்ரீஸ்' (டி.எஸ்.சி.,) திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் படி, வாக்காளரின் பெயர், பிறந்த தேதி, அப்பா பெயர் அடிப்படையாக வைத்து, நாட்டின் எத்தனை மாநிலங்களில் ஒருவர், வாக்காளர் அடையாள வைத்திருக்கிறார் என கண்டறியப்பட்டது. முகாம் துவங்கியதில் இருந்து இதுவரை, வால்பாறை சட்ட சபையில், 103 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர்.ஆனைமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகேசன் கூறியதாவது:டி.எஸ்.சி., திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட, 103 பேரின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் தகவல்கள் ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. இதுவரை, இருமாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்த, 27 பேரின் அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆய்வின் போது, அவர்கள் வீட்டில் இல்லையென்றால், அட்டை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. அவர்கள் அந்த மாநிலத்தில் விசாரணை நடத்துவார்கள்; ஒரு மாநிலத்தில் அட்டை ரத்து செய்யப்படும்.மேலும், சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பதிவு இருந்தால், ஆன்லைன் அல்லது அந்தந்த தாலுகா அலுவலகத்தை அணுகி, கூடுதலாக வைத்துள்ள அட்டையை ரத்து செய்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE