உடுமலை;உடுமலை பகுதியின், பிரதான சாகுபடியான மக்காச்சோளத்தின் விலை சரியாமல், இருக்க, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், ஒருங்கிணைப்பு குழு அமைத்து, கொள்முதலை துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், பி.ஏ.பி., மற்றும் கிணற்றுப்பாசனத்துக்கு, நடப்பு சீசனில், பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் உள்ளது. மூன்று வட்டாரங்களிலும், 60 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக, மேற்கொள்ளப்பட்ட இச்சாகுபடியில், அறுவடை விரைவில் துவங்க உள்ளது.ஒருங்கிணைப்பு குழு தமிழத்திலுள்ள, கறிக்கோழி பண்ணைகளுக்கு தேவையான தீவன உற்பத்தியில், மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்திலுள்ள, கோழி, மாட்டுத்தீவனம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, ஆண்டுக்கு, 30 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.தமிழக உற்பத்தி பற்றாக்குறை காரணமாக, மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா மாநிலங்களிலிருந்தும், ஆண்டுதோறும் மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு, பிரதான தீவன உற்பத்தியாளர்கள், மக்காச்சோளத்தை, நேரடியாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டினர்.அதற்கேற்ப, 2009ல், ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் முன்னிலையில், தீவன உற்பத்தியாளர்கள், விவசாயிகளிடமிருந்து நேரடியாக மக்காச்சோளத்தை கொள்முதல் செய்தனர். ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, நாள்தோறும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு, விலை சரியாமல், உற்பத்தியாளர்கள், விவசாயிகள் என இரு தரப்பினரும் பாதிக்காமல், வர்த்தகம் நடந்தது.விலை நிர்ணயம், எடை போடுதல் ஆகிய பணிகள் அதிகாரிகள் முன்னிலையில் நடந்ததால், முறைகேடுகளும் தவிர்க்கப்பட்டது; உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும், வரத்து அதிகளவு இருந்தது. ஒரே ஆண்டில், இந்த நடைமுறை கைவிடப்பட்டது.படைப்புழுவால் சிக்கல் நடப்பு சீசனில், மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரித்த போதும், படைப்புழு தாக்குதலால், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. தொடர் மழை, புழு தாக்குதல் உட்பட காரணங்களால், மகசூல் குறையும் நிலையில், சாகுபடி செலவும், ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. ஏக்கருக்கு, 25 குவிண்டால், மகசூல் கிடைப்பதே கேள்விக்குறியாகியுள்ளது.தற்போது, குவிண்டால், 1,300 ரூபாய்க்கே விற்பனையாகி வருகிறது. கடந்தாண்டு, வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக, குவிண்டால், 2,800 வரை விற்றது. பரவலாக பெய்துள்ள மழையால், மக்காச்சோள தட்டும் விற்பனையாவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சீசனில், நஷ்டத்திலிருந்து விவசாயிகளை பாதுகாக்க, அரசு கைகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.மருள்பட்டி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பாலதண்டபாணி கூறுகையில், ''நடப்பு சீசனில், உடுமலை பகுதியில், மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், படைப்புழு தாக்குதலால், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஆதார விலையாக, குவிண்டால், 1,900 நிர்ணயித்துள்ளது. ஆதார விலையை, அரசு அதிகரித்து, ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், கொள்முதல் செய்தால், மட்டுமே நஷ்டத்தை தவிர்க்க முடியும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE