உடுமலை:பருவமழையால், வனத்திலுள்ள தடுப்பணை, தண்ணீர் தொட்டிகள் நிரம்பியுள்ளதால், வனவிலங்குகள் இடம் பெயர்வது வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் அரிய வகை வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. சில நேரங்களில், தண்ணீர் தேவைக்காக, வன எல்லையிலுள்ள, விளைநிலங்களுக்கு இடம் பெயர்ந்து, மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவாகும். வனத்திலுள்ள சிறு ஓடைகளில், மழைக்காலத்தில் மட்டும், தண்ணீர் வரத்து இருக்கும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, வனத்துறை சார்பில், இரு வனச்சரகங்களிலும், விலங்குகளின் குடிநீர் தேவைக்காக, காட்டாறுகள், ஓடைகளின் குறுக்கே, 50க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதே போல், 40 குடிநீர் தொட்டிகளும் உள்ளன.இதில், இரு வனச்சரகங்களிலும், தலா ஐந்து தொட்டிகளுக்கு, போர்வெல் மற்றும் சோலார் மின் மோட்டார் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, தண்ணீர் தேவைக்காக, தாவர உண்ணிகள், மூணாறு ரோட்டை கடந்து, அமராவதி அணைக்கு வந்து செல்லும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தடுப்பணைகள், தண்ணீர் தொட்டிகள் நிரம்பியுள்ளதால், விலங்குகள் ரோட்டை கடந்து செல்வது, வன எல்லைக்கு இடம் பெயர்வது குறைந்துள்ளது என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.மூணாறு ரோட்டின் அருகிலுள்ள தடுப்பணை, தண்ணீர் தொட்டிகளில், தண்ணீர் அருந்த வரும் விலங்குகளை போட்டோ எடுத்தல், இடையூறு செய்தல் உட்பட அத்துமீறல்களில், ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE