உடுமலை;ஏழு குளங்களில், முகாமிட்டுள்ள அரிய வகை பறவையினங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை ஏழு குள பாசனத்திட்டத்துக்குட்பட்ட, பெரியகுளம், செங்குளம், தினைக்குளம், ஒட்டுக்குளம் உட்பட குளங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில், குளங்களில், தண்ணீர் தேங்கியிருக்கும்.இதனால், பல்வேறு வகையான அரிய பறவையினங்கள், குளங்களின் நீர்த்தேக்க பரப்பிலும், கரையிலும், முகாமிடுவது வழக்கமாகும். மேலும், இக்குளங்களுக்கு, உள்நாட்டில், குறிப்பிட்ட மாதங்கள் இடம் பெயரும் பறவைகள், வலசை வந்து செல்கின்றன.அவ்வகையில், இக்குளங்களுக்கு, கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன், நத்தை குத்தி நாரை, வெண் கழுத்து நாரை, முக்குளிப்பான், தகைவிலான்குருவி, மீன்கொத்தி, ஆள்காட்டி, நீர்காகம், மடையான், செங்கால்நாரை, தாழைக்கோழி ஆகிய அரிய வகை பறவைகள், பெரியகுளம், செங்குளம், ஒட்டுக்குளத்தில், குறிப்பிட்ட நாட்கள் முகாமிடுகின்றன. தற்போதும், சில பறவையினங்கள், குளங்களில், முகாமிட்டுள்ளன.ஆனால், குளங்களின் கரைகளில், நடக்கும் சமூக விரோத செயல்களால், பறவைகள் பாதிக்கும் நிலை உள்ளது. குறிப்பாக, மாலை நேரங்களில், குளத்து கரைகளில், மது அருந்துபவர்களால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், பறவைகள் வாழ்விடத்தை மாற்றும் நிலை உருவாகிறது.இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,' அரிய வகை பறவையினங்களின் சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தன்னார்வ அமைப்பினருடன், இணைந்து, கண்காணிப்பு குழு அமைத்து, மாலை நேரங்களில், ரோந்து சென்றால், மது அருந்துவது உட்பட சமூகவிரோத செயல்களை தடுக்கலாம். குளங்களில் மரங்களை வெட்டுவதை தடை செய்ய வேண்டும். இதனால், அரிய வகை பறவையினங்கள், பாதிப்பதை தவிர்க்கலாம்,'என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE