உடுமலை;உடுமலையில், எரிசனம்பட்டியை தலைமையாகக்கொண்டு, கூடுதல் ஒன்றியம் பிரிக்கும் திட்டத்தை, உள்ளாட்சி பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளதால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகமுள்ள வட்டாரங்களில் உடுமலை முதன்மையாக உள்ளது. இதனால், தேவனுார்புதுார், புங்கமுத்துார் உள்ளிட்ட கடைக்கோடி கிராமங்களில் உள்ள மக்கள், பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.இப்பிரச்னைக்கான தீர்வாக, எரிசனம்பட்டியை தலைமையாகக்கொண்டு, கூடுதல் ஒன்றியம் அமைக்க, கடந்த 2015ல் பொதுகூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதன்படி, உடுமலை ஒன்றியத்திலுள்ள செல்லப்பம்பாளையம், தேவனுார்புதுார், புங்கமுத்துார், ராவணாபுரம், உடுக்கம்பாளையம், எரிசினம்பட்டி, பெரியபாப்பனுாத்து, தின்னப்பட்டி, கொடிங்கியம், அந்தியூர், பூலாங்கிணர், கணபதிபாளையம், ஆர்.வேலுார், பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ரெட்டிபாளையம், தீபாலபட்டி, ஜிலோப்பநாயக்கன்பாளையம், மொடக்குப்பட்டி உள்ளிட்ட 19 ஊராட்சிகள் எரிசினம்பட்டி ஊராட்சியை தலைமையாகக்கொண்டு தனி ஒன்றியமாகவும் பிரிக்கப்படும்.சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, பெரியகோட்டை, ராகல்பாவி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், பள்ளபாளையம், குரல்குட்டை, ஆலாம்பாளையம், ஜல்லிபட்டி, குறிச்சிக்கோட்டை, குருவப்பநாயக்கனுார், தும்பலப்பட்டி, ஆண்டிய கவுண்டனுார், சின்னகுமாரபாளையம், மானுபட்டி, எலையமுத்துார், கல்லாபுரம் உள்ளிட்ட 19 ஊராட்சிகள் உடுமலை ஒன்றியமாகவும் பிரிப்பதற்கான தீர்மானம், திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை.உடுமலை சுற்றுப்பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்களாக இருந்தும், ஒன்றியம் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை முன் எடுக்காமல் இருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இத்திட்டத்தை முன்னெடுத்து செல்ல உள்ளாட்சி பிரதிநிதிகளும் செவிசாய்க்காமல் இருப்பது மக்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE