வில்லியனுார்: அரியூர் பாலசுப்ரமணியர் கோவிலில் திருடுபோன வெண்கல சிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநில், வில்லியனுார் அடுத்த அரியூர் பாரதி நகரில் பாலசுப்ரமணியன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் பூசாரியாக உள்ளார். இவர், கடந்த 16ம் தேதி இரவு 8:30 மணிக்கு பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு இரவு அங்கேயே படுத்துக் கொண்டார்.மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது, உள்ளே வெண்கலத்தால் ஆன 1.5 அடி உயரமுள்ள முருகர் உற்சவர் சிலை, நான்கு அடி உயரமுள்ள வேல், சேவல் கொடி மற்றும் மணி திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து கோவில் தர்மகாத்தா கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், பூசாரியுடன் இரவில் கோவில் வளாகத்தில் படுத்திருந்த பாரதி நகரை சேர்ந்த பெருமாள் மகன் ராஜா,32; அவரது கூட்டாளி அரியூர் ஏழுமலை மகன் முருகன்,49; ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.அதில், பூசாரி அயர்ந்து துாங்கியதும், அவரிடம் இருந்த சாவியை எடுத்து கோவில் கதவை திறந்து சிலை, வேல், சேவல் கொடி மற்றும் மணியை திருடிச் சென்று, பங்கூர் ஏரியில் மறைத்து வைத்திருப்பதை ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில், பங்கூர் ஏரியில் பதுக்கி வைத்திருந்த வெண்கல சிலை உள்ளிட்ட பொருட்களை போலீசார் மீட்டனர்.மேலும், இருவரையும் கைது செய்த, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE