அரூர்: அரூர் பகுதியில், கூலி ஆட்கள் பற்றாக்குறையால், மரவள்ளி கிழங்கு அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர் சுற்று பகுதிகளில், நடப்பாண்டு இறவை பாசனம் மூலமும், மானாவாரியாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கை நடவு செய்துள்ளனர். தொடர் மழையால், முன்கூட்டியே துவங்கிய மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யும் பணி, கடந்த, மூன்று மாதங்களாக நடக்கிறது. இந்நிலையில், நிவர், புரெவி புயலால் பெய்த மழையால், வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால், மரவள்ளி கிழங்கு அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரே நேரத்தில் மரவள்ளி கிழங்கை அறுவடை செய்யும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால், போதிய கூலி ஆட்கள் இல்லாததால், அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். ஏற்கனவே, கிழங்கு விலை கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், அறுவடை பணிக்கு ஆட்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE