ஈரோடு: ''கல்லூரிகளில் கொரோனா விதிகளை, முறையாக கடைப்பிடிக்க வேண்டும்,'' என, இந்திய மருத்துவ சங்கத்தின், அகில இந்திய துணைத்தலைவர் ராஜா தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால், கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் சென்னை ஐ.ஐ.டி., உட்பட சில கல்லூரியில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளில் விதிகளை முழு அளவில் கடைப்பிடித்தால் மட்டுமே, கொரோனா பரவலை தடுக்க முடியும். உரிய விதிகளுடன் வகுப்பு நடத்த வேண்டும். மாணவர், ஆசிரியர்களின் பிற கலந்துரையாடல்களை போன், மெயில் போன்றவற்றில் வைத்து கொண்டால், கொரோனா பரவலை தடுக்கலாம். இருப்பினும் கல்லூரி மாணவர்களுக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும். பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு தொடங்க வேண்டும். கொரோனா காலத்தில், தமிழகத்தில், 58 டாக்டர்கள் இறந்துள்ளனர். அவர்களை முன்னிலை பணியாளர்களாக கருதி, நிவாரணம் வழங்க கோரினோம். தற்போது, 25 டாக்டர்களுக்கு தலா, 25 லட்சம் ரூபாய் வரை அரசு வழங்கவுள்ளது. மற்றவர்களுக்கும் வழங்க பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசின் மினி கிளினிக் திட்டத்தை வரவேற்கிறோம். இதனால் மருத்துவ வசதி கிடைக்காத பகுதியில் உள்ளவர்களுக்கு, சேவை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE