ஓசூர்: ஓசூரில் உள்ள, ஜி.ஆர்.பி., நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து, ரூ.4.83 லட்சம் மோசடி செய்து எடுத்த, அசாம் மாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில், ஜி.ஆர்.பி., என்ற பால் உணவு தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. தங்களுக்கு தேவையான பொருட்களை, பெங்களூரு எர்ரண்டஹள்ளியை சேர்ந்த, தனியார் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதற்காக ஜி.ஆர்.பி., நிறுவனம் மூலம், கடந்த ஜூலை, 16 ஆயிரத்து, 977 ரூபாய் மதிப்பிலான காசோலை, கூரியர் மூலம் பெங்களூரு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், காசோலை கூரியர் வந்து சேரவில்லை என, பெங்களூரு நிறுவனம் கூறியது. இந்நிலையில் கடந்த ஜூலை, 10ல், ஓசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஜி.ஆர்.பி., நிறுவனத்தின் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கில் இருந்து, நான்கு லட்சத்து, 83 ஆயிரத்து, 611 ரூபாய், மற்றொரு வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டது. இதையறிந்த, ஜி.ஆர்.பி., நிறுவன மனிதவளத்துறை மூத்த மேலாளர் புஷ்பராஜ், 57, ஓசூர் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகாரளித்தார். விசாரணையில், ஜி.ஆர்.பி., நிறுவனம் மூலம், பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு, 16 ஆயிரத்து, 977 ரூபாய்க்கு வழங்கப்பட்ட காசோலையை, நான்கு லட்சத்து, 83 ஆயிரத்து, 611 ரூபாய் என மாற்றி, அசாம் மாநிலம், கரீம்கான் மாவட்டம், கஜிர்கிராம் பகுதியை சேர்ந்த ஜஷிம் உதின் என்பவரது வங்கி கணக்கில், பணம் வரவு வைக்கப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, சிப்காட் போலீசார், வழக்குப்பதிவு செய்து, ஜஷிம் உதினை தேடி வருகின்றனர். இவரை கைது செய்த பின் தான், பெங்களூரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காசோலை, இவரது கைக்கு எப்படி சென்றது என்பது தெரியவரும் என, சிப்காட் போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE