ஓமலூர்: ''முதல்வர் எண்ணத்தில் ஒருநாளும் இருந்ததே கிடையாது,'' என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடியிலும், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியிலும், 'மினி கிளினிக்'கை, முதல்வர் பழனிசாமி, நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு, 'தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம்' வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: நம் மாவட்டம், முதல்வர் எனும் பெருமைகொள்ளும் மாவட்டமாக உள்ளது. வேறு மாவட்ட முதல்வராக இருந்தால், முத்துநாயக்கன்பட்டிக்கு வருவாரா. நான், பலமுறை இங்கு வந்து பேசியுள்ளேன். அப்போது, எப்படி இருந்தேனோ, அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, உங்களுக்கு பணி செய்ய பொறுப்பைத்தான் தந்துள்ளார்கள். நான் ஒருநாளும், முதல்வர் என்ற எண்ணத்தில் இருந்ததே கிடையாது. இருக்கப்போவதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய, உயர்ந்த பணி. அப்பணியில் இருந்தால் சேவை செய்யமுடியும். அப்பணியை, சிந்தாமல் சிதறாமல், நீங்கள் நினைப்பதை நிறைவேற்றும் முதல்வராக இருப்பேன். என் முன் நிற்கிற அனைவரையும் முதல்வராக பார்க்கிறேன். நீங்கள் கொடுத்த பதவியை, சிறப்பாக செய்து, நம் மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பேன். தி.மு.க.,வினர் சுயநலவாதிகள். தன் குடும்பம்தான் வாழ வேண்டும் என, எண்ணுகின்ற ஒரே கட்சி தி.மு.க., தலைவர் முதல் தொண்டர் வரை, அப்படிதான் இருக்கும் அந்த கட்சியில். அ.தி.மு.க.,வில் உழைக்கிறவர்கள் பதவிக்கு வரமுடியும். எம்.ஜி.ஆர்., மட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கும் வாரிசு கிடையாது. மக்கள்தான் வாரிசு. நாட்டு மக்களை குழந்தையாக எண்ணி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டினர். இவ்வாறு முதல்வர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE