பேரூர்: கோவை வனச்சரகரின் ஸ்ரீவில்லிபுத்துார் தோட்டத்து வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கோவை, போளுவாம்பட்டி வனச்சரகராக பணியாற்றுபவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி கலைவாணி, இளைய மகனுடன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் வசிக்கிறார். இந்நிலையில், பந்தப்பாறையில் கலைவாணி பெயரில் இருக்கும் தோட்டத்து வீட்டில், 327 கிலோ சந்தன மரக்கட்டைகள் ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து, கலைவாணி, வனச்சரகர் ஆரோக்கியசாமி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. அதிகாரி வீட்டிலேயே, சந்தனக்கட்டைகள் சிக்கிய சம்பவம், வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெட்டியது எங்கே...
கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்தில் சந்தன மரக்கடத்தல் அவ்வப்போது நடக்கிறது. கடந்த ஆண்டு, நவ., - டிச., மாதங்களில் முள்ளாங்காடு, போராத்தியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. டிச.,ல் மட்டும் நான்கு மரங்கள் கடத்தப்பட்டன.கொரோனா தீவிரமாக இருந்த காலத்தில், ஆரோக்கியசாமி காரில் ஸ்ரீவில்லிப்புத்துார் சென்று வந்துள்ளார். வேட்டை தடுப்பு காவலர் கார் ஓட்டியுள்ளார். மற்றொரு வேட்டை தடுப்பு காவலரின் காரிலும் சென்று வந்துள்ளார். இவர்களில் ஒருவர், போலி பில் மோசடியில் தொடர்புஉடையவர்.சிக்கிய வனச்சரகர், இதற்கு முன் குற்றாலத்திலும், முதுமலையிலும் பணியாற்றியவர். அங்கு நடந்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

ஆரோக்கியசாமியின் மகன், மகள் ஆகியோர், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படிப்பதாக, வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.'இந்த முறைகேட்டில் தொடர்பிருக்கலாம்' என்ற சந்தேகத்தில் நேற்று போளுவாம்பட்டி வனச்சரக அலுவலக ஊழியர்களிடம் உளவு பிரிவு போலீசார், ரகசிய விசாரணை மேற்கொண்டனர். விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வனச்சரகர் 'சஸ்பெண்ட்'
சந்தனக்கட்டைகள் தோட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, வனச்சரகர் ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமி, பணியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கோவை அதிகாரி மீது வழக்குவனத்துறை தீவிரம்
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கோவை வன அதிகாரி தோட்டத்தில் சந்தன மரகட்டைகள் கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வன துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை பந்தபாறையில் கோவை வன அதிகாரி ஆரோக்கியசாமியின் மனைவி கலைவாணிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு சந்தனமரகட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாநில வனத்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்ததும் வன அதிகாரி மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மாவட்ட வனஅலுவலர் முகமதுஷாபாப் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE