ராமநாதபுரம்: இந்தியாவிலேயே குஜராத்துக்கு அடுத்தபடியாக மிக நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலம் தமிழகம். கடற்கரை நீளம் 1076 கி.மீ.,. 608 மீனவ கிராமங்கள் உள்ளன. 10.48 லட்சம் மீனவ மக்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் 5806 விசைப்படகுகள், 41,653 நாட்டுப்படகுகளில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். பெரும்பகுதி மீனவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ராமநாதபுரம் மாவட்டம். இங்குதான் மாநிலத்தின் மிக நீண்ட நெடிய கடற்கரை அமைந்துள்ளது.
இதன் நீளம் 281.47 கி.மீ.. ஆகும். 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் மூக்கையூர், பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, தேவிப்பட்டினம் முக்கியமானவை. இம்மாவட்டத்தில் மட்டும் 1.5 லட்சம் பேர் மீன்பிடித்தொழிலை நம்பி காலம் தள்ளுகின்றனர்.
இம்மாவட்டத்தில் மீன் பிடித்தொழிலே பிரதானம் என்றாலும், ஏனோ மீனவர்களின் வாழ்வு வசப்படவில்லை. உப்புக்காற்றோடு உறவாடி ஆழ்கடல் சென்று களமாடினாலும் வசந்தக் காற்றின் வாடை இவர்களை தீண்டுவதில்லை. சீற்றம் கொண்ட கடலுக்கு கூட இவர்கள் மீது கரிசனம் உண்டு. ஏனோ ஏற்றம் தர வேண்டிய அரசிற்கு இல்லை. விளைவு, பொருளாதார பட்டியலில் கடைக்கோடியில் தேங்கி நிற்கின்றனர் இம்மாவட்ட மீனவர்கள்.
மணல் மேவும் துறைமுகம்

படகுகளை நிறுத்த கூட நல்ல மீன்பிடி துறைமுகம் கிடையாது. 2019ல் தான் மூக்கையூரில் ரூ.128.8 கோடியில் ஒரு மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடி படகுகளையும் நிறுத்தலாம் என அரசு அறிவித்தது. ஆனால் அலைகள் புகுவதை தடுக்க துாண்டில் வளைவுகள் இல்லை. மாறாக இருபுறமும் தடுப்புச்சுவர் மட்டும் உள்ளது. காற்றும், அலையும் வேகமாக துறைமுகத்தை தாக்குகின்றன. நீரோட்டத்தால் துறைமுகப் பகுதியை மணல் மேவுகிறது. ஆழ்கடல் படகுகளை நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. மற்ற படகுகளை சூறைக்காற்றும், பேரலையும் மோதி பதம் பார்க்கின்றன.
அதிருப்தியில் மீனவர்கள்
சூரை போன்ற மீன்களை கையாள குந்துகாலில் ரூ.74 கோடியில் மீன் இறங்குதளம் கட்டப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி திறந்தார். இப்பகுதியில் ராட்சத அலைகள் மோதுகின்றன. இங்கும் துாண்டில் வளைவுகள் இல்லை. கோடிகளை செலவிடும் அரசு திட்டமிடலில் சொதப்பிவிட்டது. துாத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை காசிமேடு பகுதிகளில் மிகவும் நேர்த்தியான மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துள்ள நிலையில் குந்துகால், மூக்கையூர் திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.டீசல் விலை உயர்வு பெரும் தலைவலியாக உள்ளது. ஆண்டுதோறும் விசைப்படகுகளுக்கு 18,000, இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டர் மானிய விலை டீசல் வழங்கப்படுகிறது. மாநில அரசின் விற்பனை வரியை மட்டும் நீக்கி விட்டு கொடுக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து விதமான வரிகளை நீக்கிவிட்டு கச்சா எண்ணெய் விலைக்கே வழங்க வேண்டும் என்பது மீனவர்களின் எதிர்பார்ப்பு. டீசல் அளவை அதிகரிப்பதும் முக்கியம்.

வருமானம் பெருகும்
மீன், இறால், நண்டு விலை சரிவும் மீனவர்களின் வருமானத்தில் அவ்வப்போது கை வைக்கின்றன. அரசே நிலையான விலை நிர்ணயம் செய்வது அவசியம். ஆழ்கடல் மீன்பிடி படகு தயாரிப்பதற்கான மானியத்தை இன்னும் உயர்த்த வேண்டும். பாக், வளைகுடா பகுதி மீனவர்களின் அட்சயபாத்திரமாக விளங்கும் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை தேவை. இதில் அரசியல் விளையாட்டுகளை புறந்தள்ளிவிட்டு அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை தேவை. ஆலை கழிவுகளால் மீன் வளம் கெடுவதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலோர பகுதிகளில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தி, கடல் உணவு, அலங்கார பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். இது மீனவ மக்களின் வருமானத்தை பெருக்க உதவும்.
கருத்து கேட்பு கூட்டம்
தமிழகத்தின் மொத்த கடல் மீன் உற்பத்தியில் ராமநாதபுரத்தின் பங்களிப்பு தான் அதிகம். இருப்பினும் இம்மாவட்ட மீனவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தமத்திய, மாநில அரசுகள் போதிய அக்கறை செலுத்தாதது ஆச்சர்யம். சிறப்பு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி இவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவ வேண்டும். குடிசைகளில் வாடும் மீனவர்களை முதல்வர் பழனிசாமியும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஒருமுறை நேரில் பார்த்தால் அவர்களின் நிலை புரியும்.செய்வார்களா...! நேரில் செல்வார்களா...!
கச்சத்தீவும்... கலைந்த கனவும்...
இந்தியா, இலங்கை இடையே அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு இது. ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டரில் உள்ளது. 1480ல் கடல் கொந்தளிப்பால்தோன்றியது. மொத்த பரப்பு 285.2 ஏக்கர். இன்று இலங்கை வசம் இருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. மன்னர் ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் சேது அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள அந்தோணியார் ஆலயம் 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் கட்டப்பட்டது. அதை கட்டியவர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர். சுதந்திரம் பெறும்போதும் கூட அத்தீவு இந்தியாவிடம் தான் இருந்தது.அங்கு நம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டபோது, திடீரென கச்சத்தீவை இலங்கை உரிமை கொண்டாடத்துவங்கியது.

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அந்நாடு, 1959ல் விமானப்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்போம் என சேட்டை செய்தது. இவ்விவகாரம் நம் பாராளுமன்றத்தில் விவாதமானது. கச்சத்தீவின் மகிமையை அப்போதைய ஆட்சியாளர்கள் உணரவில்லை.1974ல் அத்தீவை மத்திய அரசே இலங்கைக்கு தாரைவார்த்தது. ஓய்வெடுப்பது, வலையை உலரவைப்பது, கடும் புயலில் அடைக்கலம் தேடுவது என கச்சத்தீவில் இருந்த அனைத்து உரிமைகளையும் நம் மீனவர்கள் பறிகொடுத்தனர்.அள்ள, அள்ள குறையாத மீன்வளம் கொண்ட அந்த தீவு இன்று வரை நமக்கு கிடைக்கவில்லை.
அந்தப்பக்கம் சென்றாலே இலங்கை கடற்படை, அந்நாட்டு மீனவர்களால் நம்மவர்கள் தாக்கப்படுகின்றனர். 'கச்சத்தீவை மீட்போம்' என்ற வாக்கியம் அ.தி.மு.க., தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிகளாக மாறிவிட்டன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டு வேட்டைக்கு மட்டும் அந்த வாக்கியம் பயன்படுகிறது. இத்தீவு கைநழுவ யார் காரணம் என்று சண்டையிட்டே சட்டமன்ற நேரத்தை இருக்கட்சிகளும் வீணடிக்கின்றன. மீன்வளம் நிறைந்த கச்சத்தீவை கைப்பற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசும், கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
2018-19ம் ஆண்டு கடல் மீன் உற்பத்தி
இந்தியா
*மொத்த மீன் உற்பத்தி: 1.34 கோடி டன்
* மீன் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதி: 13.93 லட்சம் டன்
*ஈட்டிய அந்நிய செலாவணி: ரூ.46,598.37 கோடி
தமிழகம் (தேசிய அளவில் 3ம் இடம்)
* மொத்த மீன் உற்பத்தி: 6.90 லட்சம் டன்
* மீன் மற்றும் மீன் பொருட்கள் ஏற்றுமதி: 1.29 லட்சம் டன்
* ஈட்டிய அந்நிய செலாவணி: ரூ.5591.49 கோடி
ராமநாதபுரம் (மாநில அளவில் முதலிடம்)
* மொத்த மீன் உற்பத்தி: 91 ஆயிரம் டன்
(இது மொத்த உற்பத்தியில் 13.18 சதவீதமாகும்)

கடற்கரை பெயர்கள்
தமிழக கடற்கரையை 4 பிரிவுகளாக பிரிக்கின்றனர்.
* சென்னை-கோடியக்கரை வரை (357.2 கி.மீ.,) கோரமண்டலம்
*கோடியக்கரை-பாம்பன் வரை (293.9 கி.மீ.,) பாக் ஜலசந்தி
* பாம்பன்-கன்னியாகுமரி வரை (364.9 கி.மீ.,) மன்னார் வளைகுடா
* கன்னியாகுமரி-நீரோடி வரை (60 கி.மீ.,) மேற்கு கடற்கரை என்று பெயரிடப்பட்டுள்ளது.
மீன்பிடி தொழிலை விட்டு வெளியேறுவோம்
ஏற்றுமதியாளர்களை நம்பி தான் மீன்பிடித்தொழில் உள்ளது. மீனவர்களே விலையை நிர்ணயம் செய்ய மீன் சூப்பர் மார்க்கெட்களை அரசு நிறுவ வேண்டும். உழவர் சந்தையை விவசாயிகள் நிர்வகிப்பது போல, இவற்றை மீனவர்களே கவனிப்பர். அனைத்து தர மீன்களையும் மக்கள் பெறும் வாய்ப்பு கிடைக்கும். உயர்தர மீன்களும் மலிவு விலையில் கிடைக்கும். ஆழ்கடல் மீன்பிடித்திட்டம் சிறப்பானது. இத்திட்டத்திற்காக குந்துக்கால், மூக்கையூரில் அமைக்கப்பட்டதுறைமுகங்களால் எள் முனையளவு கூட பயனில்லை. அங்குபடகுகள் ஒன்றோடு ஒன்று மோதி நொறுங்கிவிடும் அபாயம் நீங்க, உடனடியாக துாண்டில் வளைவுகளை அரசு அமைக்க வேண்டும். டீசல் விலை கண்மூடித்தனமாக உயர்கிறது. விசைப்படகுகளை இயக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் விவசாயிகளை போன்றவர்கள் தான். அனைத்து வரிகளையும் நீக்கிவிட்டுவிலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் மீனவர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறும் நிலை வரும்.
--என்.ஜே.போஸ்,
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நலச்சங்கம்
நிவாரணத்தை உயர்த்த வேண்டும்
பாம்பன் வடக்கு கடற்கரையில் நுாற்றுக்கணக்கான படகுகளை நிறுத்தியுள்ளோம். பருவமழை காலங்களில் காற்றில் ஒன்றோடொன்று மோதி சேதமடையும் சூழல் உள்ளது. தடுக்க அங்கு துாண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். இயற்கையாகவே பாறைகள் இருக்கின்றன. அவற்றின் மீது குறிப்பிட்ட அளவு கற்களை கொட்டினாலே போதும் அலைகள் மோதாது. ரூ.5 கோடி கூட செலவாகாது.ஆழ்கடல் மீன்பிடிக்கு நாட்டுப்படகுகளையும் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு சீசனுக்கும் குறிப்பிட்ட வலையை மட்டும் பயன்படுத்த விதி தேவை. ஆலை ரசாயன கழிவு கடலில் கலந்து மீன் வளம் குறைந்துவிட்டது. தீர்வுகாண நாதி இல்லை. நாட்டுப்படகு தயாரிக்க, ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு வலைகள் வாங்க அரசு மானியம் தர வேண்டும். தேசிய மீனவர் சட்டத்தின் மூலம் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மாநில அரசு குரல் கொடுக்க வேண்டும். இயற்கை சீற்றத்தில் சிக்கி மீனவர்கள் இறந்தாலோ, மாயமானாலோ குடும்பத்திற்கு வழங்கப்படும் தினசரி நிவாரணத்தை ரூ.250ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்த வேண்டும்.
-எஸ்.பி.ராயப்பன்
மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச்சங்கம்,
பாம்பன்
கேரளாவிடம் பாடம் கற்கவேண்டும்
கச்சத்தீவை தாரை வார்த்ததால் எங்கள் மீன்பிடி எல்லை சுருங்கிவிட்டது. கச்சத்தீவு, மீனவர்களின் பிரச்னை பற்றி பேச ஆளில்லை. மத்தியில் மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும். இக்கால கட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடித் திட்டம் நல்லது தான். ஆனால் இதற்கான படகு கட்ட, வலை, பொருட்கள் வாங்க மொத்தம் ரூ.1.20 கோடி வரை தேவை. மத்திய, மாநில அரசுகளின் மானியமோ ரூ.56 லட்சம் தான். எஞ்சிய பணத்தை வங்கி கடன், கந்து வட்டியாக வாங்கி வாழ்க்கையை தொலைக்கிறோம். இம்மானித்தை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும். துறைமுகம் கட்ட கேரளாவிடம் பாடம் கற்க வேண்டும். மூக்கையூர் துறைமுகத்திற்குள் புகுந்த மணலை அள்ளிவிட்டு, அலையாத்தி அமைக்க வேண்டும். இல்லையென்றால் நவ. - பிப்.,ல் வீசும் காற்றில் படகுகள் நொறுங்கும். இலங்கை கடற்படை பறித்த அனைத்துப் படகுகளையும் மீட்க வேண்டும். அங்கு சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு புதிய படகு வழங்க வேண்டும்.
-சகாயம்
செயலாளர்,
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகுகள் சங்கம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE