சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பிரசாரம் செய்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், சேலம் சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, இடைப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஊராட்சி பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார். சாலையில் நடந்து சென்றவாரே, இரு புறமும் கூடியுள்ள பொது மக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தை 31 ஆண்டுகள் அதிமுக ஆண்டுள்ளது. பல்வேறு சோதனைகளை கடந்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன், அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து விருது கிடைக்கிறது. மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லை. உபரி மின்சாரத்தை உருவாக்கி வருகிறோம்.

நீர்மேலாண்மையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. உயர்கல்வியில், இந்தியாவிலேயே, தமிழகம் சிறந்து விளங்குகிறது. உயர்கல்வி பயில செல்வோர் எண்ணிக்கையில் தமிழகத்தில் தான் அதிகம் . 49 சதவீதம் பேர் உயர்கல்விக்கு செல்கின்றனர்.சாலை வசதிகள் விரிவுபடுத்தப்பட்டு தேவையான இடங்களில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பாடி தொகுதி அதிமுகவின் அதிமுகவின் எக்கு கோட்டை. 43 ஆண்டு கால வரலாற்றில் ஒரு முறை கூட இடைப்பாடி தொகுதியில் திமுக வெற்றி பெற்றதில்லை.

கடவுள் அருளால் முதல்வர் பதவி
முதல்வராவேன் என ஒரு போதும் நினைத்தது இல்லை. கடவுள் அருளால் முதல்வர் பதவி கிடைத்தது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவானது. அரசு அதிகாரிகள், மக்களை தேடி சென்று அதிகாரிகள் குறைகளை தீர்த்து வருகின்றனர். திமுக தலைவர்கள் அனைவரும் பிரசாரம் செய்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது. அதிமுக கூட்டணி பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெறும். நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE