சிவகங்கை:மனிதர்களை தேனீக்கள் கொட்டினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், என தேனீ வளர்ப்பாளர் ஜோஸ்பின் மேரி தெரிவித்தார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தேனீ வளர்ப்பு குறித்து அதன் வளர்ப்பாளர் ஜோஸ்பின் பேசியதாவது: தேனீக்கள் மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. விவசாய நிலங்களில் தேனீக்கள் வளர்த்தால் மகரந்த சேர்க்கை அதிகரித்து உற்பத்தியை பெருக்கும். தேனீக்கள் மனித உடலில் கொட்டினால் அதன் விஷத்தன்மை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனீக்கள் நம்மை கொட்டியவுடன் அது இறந்து விடும். தேனீக்கள் கொட்டுவதால் முழங்கால்வலி, முதுகுவலி குணமாகிறது.தேனீக்களை கொட்ட வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. நாவல் மரங்கள், முருங்கை மரம், குங்குமப்பூ, வேம்பு மரம் போன்ற இடங்களில் இருந்து பெறப்படும் தேனின் சுவையும், நிறமும் மாறுபடுகிறது.38 வகையான தேன்கள் தயாரித்து வருகிறேன். சர்க்கரை நோயாளிகள் நாவல் தேன் சாப்பிட்டால் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முருங்கை தேன் மலட்டு தன்மையை நீக்குகிறது. இப்படி ஒவ்வொரு வகைத்தேனும் மனிதனின் நோயை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டுக்கு ஒரு தேனீ பெட்டி இருந்தால் குடும்பத்திற்கு ஆயுள் கெட்டி, என அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE