கிருஷ்ணகிரி: ஏரி கட்டியதற்காக, 600 ஆண்டுகளுக்கு முன், நிலத்தை தானம் அளித்ததற்கான கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் அருகில் எம்.ஜி.அள்ளியில் உள்ள ராஜா, முருகன் ஆகியோரின் மாந்தோப்பில், 600 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர காலத்து, 37 வரிகளை கொண்ட கல்வெட்டை, வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டறிந்தனர். இது குறித்து, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த கல்வெட்டு, 1431ல், இரண்டாம் தேவராயன் காலத்தில், இப்பகுதியை இலக்கண்ணுடையார் ஆண்டபோது நாதகள், வைச்சன்னகள் மற்றும் அரியண்ணகள் ஆகிய மூவரும் பெருமுகைக்கும், கங்கபுரத்திற்குமான எல்லை பகுதியில் ஏரியை கட்டினர். இதற்காக, கங்கபுரத்தை நாயக்கத்தனம் செய்து வந்த நாகையநாயக்கர் மற்றும் மல்லப்ப சொக்கண்ணன் ஆகியோர், இலங்கணிக்கோட்டை என்ற இடத்தில் உள்ள ஏரியின் முதல் மடைப்பகுதியில், 1,000 குழி நிலத்தை ஏரி கட்டியதற்கான தானத்தை அளித்த செய்தியை குறிக்கிறது.
மற்றொரு கல்வெட்டில், வைச்சன்னகள், அரியண்ணகள் ஆகிய இருவரும் மாரப்பனுக்கு, 500 குழி நிலத்தை குடங்கை மானியமாக அளித்த செய்தியை குறிக்கிறது. இது இன்றைய குத்தகையை போன்றதாகும். தமிழகத்தின் தென் பகுதி கல்வெட்டுகளில், இச்சொல் காணப்படவில்லை. கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் கர்நாடகா மாநில கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ளது சிறப்பு. இவ்வாறு அவர் கூறினார். குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், ரவி ஆகயோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE