சேலம்: வரும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று முறைப்படி துவக்குகிறார். ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை, முதல்வர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன், தன் இடைப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 'மினி கிளினிக்'கை திறந்துவைக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல், வரும் மே மாதம் நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள், தற்போதே தேர்தல் பிரசாரத்தில் இறங்கி உள்ளன. ஆளுங்கட்சியான, அ.தி.மு.க.,வும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு தேர்தலிலும், இடைப்பாடி சட்டசபை தொகுதியின், பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவிலில், தரிசனம் செய்து விட்டு, தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி, இன்று காலை, 10:30 மணிக்குமேல், அந்த பெருமாள் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின், கோவிலுக்கு வெளியே, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். தொடர்ந்து, இடைப்பாடி தொகுதியில், பல்வேறு இடங்களில் மினி கிளினிக்கை திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக, நேற்று, சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள, அ.தி.மு.க., புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: லாரி உரிமையாளர்கள் போராட்டம் குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் தெளிவாக கூறி உள்ளார். ஜி.பி.எஸ்., பொருத்தும் திட்டம், மத்திய அரசு கொண்டு வந்தது. தரமான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும். இங்கு தான் வாங்கவேண்டும் என நிர்பந்தப்படுத்தவில்லை. காஸ் விலையை குறைக்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். லோக்சபா தேர்தலின்போது இருந்த கட்சிகளுடன் கூட்டணி தொடரும். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலம் கொடுத்து விட்டோம். மின் துறை தனியார் மயமாக்கப்படாது. மின்வாரிய, 'கேங்மேன்' பணி ஆணை குறித்த வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் இதுகுறித்து பேச இயலாது. 2013ல் ஆசிரியர் தேர்வு எழுதி, 90 மார்க் வெயிட்டேஜால் பாதிக்கப்பட்டது குறித்து, கல்வி அமைச்சர் பலமுறை விளக்கம் அளித்துள்ளார். நாளை (இன்று), நங்கவள்ளி ஊராட்சி, பெரியசோரகை சென்றாயப்பெருமாள் கோவிலில், தரிசனம் செய்துவிட்டு, இடைப்பாடி சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை பொதுத்தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். பல இடங்களுக்கு செல்லவேண்டியுள்ளதால், தொகுதிக்கு வர முடியாத சூழல் உள்ளது. மேலும், குறைந்த நாட்களே உள்ளதால், கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, என் தொகுதியில், பிரசாரத்தை தொடங்குகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'நாளை(இன்று) தேர்தல் பிரசாரத்தை துவக்கும் முதல்வர், முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். குறிப்பாக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசாக, 2,000 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புக்களை அறிவிக்க வாய்ப்புள்ளது' என்றனர். முதல்வர் தேர்தல் பிரசாரம் துவக்க உள்ளதை அடுத்து, பெரியசோரகையில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE