காரியாபட்டி:அழகர் கோயில் செல்லும் பக்தர்களுக்கு அன்னம் வழங்க காரியாபட்டி எஸ்.தோப்பூர் அருகே கட்டப்பட்ட ஆறுகால் மண்டபம் முன்னோர்கள் செய்த தர்மத்தின் அடையாளமாக ஆறு தலைமுறையாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவின் போது நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாட்டு வண்டி பூட்டி, பாதயாத்திரையாக அழகர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். இரண்டு மூன்று நாட்கள் என நடந்து செல்லும்போது உணவுக்காக சிரமப்படுவார்கள் என்பதை அறிந்து எஸ். தோப்பூரை ஊரைச் சேர்ந்த கார்மேகம் குடும்பத்தை சேர்ந்தோர் 6 தலைமுறைக்கு முன்பே அன்னசத்திரம் ஏற்படுத்தினர்.
முற்றிலும் கற்களால் உருவாக்கப்பட்டது. ஆறு தூண்களை கொண்டதால் இதற்கு ஆறுகால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. பாதயாத்திரையாக வருபவர்கள் இரவில் தங்கி ஓய்வு எடுத்து சென்றுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, சிரமமின்றி அழகர்கோவில் சென்றுவர அன்னதானம் வழங்கி அன்புடன் வழிநடத்தி அரவணைப்புடன் நடந்துகொண்ட முன்னோர்களின் தர்மம் இன்றளவும் பேசப்படுகிறது.
பொங்கல் வைத்து பூஜை
200 ஆண்டுகளுக்கு முன் எனது முன்னோர்கள்அழகர் கோயில் செல்லும் பக்தர்கள் ஓய்வெடுத்து பசியாற வேண்டும் என்கிற நோக்கத்தில் கற்களால் ஆன ஆறு கால் மண்டபத்தை ஏற்படுத்தினர். எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கினர். தற்போது வாகன போக்கு வரத்து அதிகரித்ததால் மாட்டுவண்டி, பாதயாத்திரை என்பது அரிதாகிவிட்டது. யாரும் பாதயாத்திரை செல்லாததால் சில ஆண்டுகளாக அன்னதானம் வழங்கவில்லை. சித்திரை திருவிழாவின்போது பொங்கல் வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வோம். இன்றளவும் தர்மத்தின் சின்னமாக கம்பீரமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.கார்மேகம், எஸ். தோப்பூர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE