புதுடில்லி :''இந்தியாவில் ஏன் என்ற நிலையில் இருந்து, இங்கு ஏன் வாழக்கூடாது என்ற நிலையை நோக்கி, நாம் நகர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
'அசோசெம்' எனப்படும், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் நிறுவன வாரம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, நேற்று நடந்த சிறப்புக் கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:இந்தியாவின் வளர்ச்சியில், டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. நம் நாடு, தற்சார்பு பெற்ற நாடாக மாறுவது மட்டும் சவால் இல்லை; அதனை, எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம்.இந்தியா, தற்சார்பு பெற்ற நாடாக மாற, தொழில் துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
மத்திய அரசு கவனம்
உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகி வருகிறது. இதனால், நம் நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய, இன்று முதல் தயாராகி, அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கொரோனா பரவல் காலத்திலும், இந்தியா தன் பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வையை, மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்கள் மாற்றியுள்ளன.
தற்சார்பு இந்தியா திட்டத்திற்காக, மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, பல சலுகைகளை அளித்து வருகிறது. உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும், இந்தியாவில் நேரடி அன்னிய முதலீடு அதிகரித்தது.
தனியார் துறை முதலீடு
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில், முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்தத் துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் ஏன் என்ற நிலையில் இருந்து, இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி, நாம் நகர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நூற்றாண்டின் அசோசெம் நிறுவனம் விருதை, தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு, பிரதமர் மோடி வழங்கினார்.
'வேளாண் சட்டங்கள் பலனளிக்க துவங்கியுள்ளன'
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், டில்லியில், கடந்த, 24 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் பயனடைந்த விவசாயிகள் பற்றிய விபரங்கள், வேளாண் சட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் ஆகியவை அடங்கிய, 'இ புத்தகம்' எனப்படும் மின்னணு கையேடு ஒன்றை, மத்திய அரசு தயாரித்துள்ளது.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மின்னணு கையேடு பற்றி, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால், விவசாயிகள் பலனடைய துவங்கி விட்டனர். புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், அதனால் பயன் அடைந்த விவசாயிகள் பற்றியும், மின்னணு கையேட்டில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த கையேட்டை, 'நமோ ஆப்' மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மின்னணு கையேட்டை முழுமையாக படித்தால், வேளாண் சட்டங்கள் பற்றி தெரிநது கொள்வதுடன், அவற்றின் மீது, விவசாயிகளுக்கு நம்பிக்கையும் அதிகரிக்கும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE