வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் படுகை அணையில் இரு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதால் அணை உடையும் ஆபத்து நிலவி வருகிறது.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சியில் கடந்த 1906ம் ஆண்டு படுகை அணை அமைத்துள்ளனர்.பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு, வம்புப்பட்டு, கலித்திராம்பட்டு, வழுதாவூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் இந்த படுகை அணை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அணை உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016ல் பெய்த கன மழையால் பிள்ளையார்குப்பம் மதகு பகுதிக்கு அருகே படுகை அணையில் சேதம் ஏற்பட்டது.மேலும் படுகை அணையின் கீழ்பகுதியில் சீமை கருவேல மரங்கள் காடு போன்று வளர்ந்ததால் அணைக்கட்டு பகுதி சேதமடைந்தது.விவசாயிகளின் புகாரின் பேரில் நீர்பாசன கோட்டம் சார்பில் ஜே.சி.பி., மூலம் படுகை அணையில் சேதமடைந்த பகுதியை சரி செய்து மண் மூட்டைகள் அடுக்கி வைத்து பாதுகாத்தனர்.
தற்போது தொடர்ச்சியாக பெய்த கனமழையாலும், வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பிள்ளையார்குப்பம் படுகை அணையில் தொடர்ந்து நீர் மட்டம் அதிகரித்து வழிந்தோடுகிறது. இதனால் அணையில் செல்லிப்பட்டு பகுதியில் இரு இடங்களில் சேதமடைந்துள்ளது.அரசு, போர்க்கால அடிப்படையில் சேதமடைந்துள்ள படுகை அணையை உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும். இல்லை என்றால், படுகை அணை பெரிய அளவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE