கோல்கட்டா:''அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கும்போது, திரிணமுல் காங்கிரஸ் கட்சியில், மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். மாநிலத்தில், பா.ஜ., ஆட்சி அமையும்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா எச்சரிக்கை விடுத்தார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. சட்டசபையின், 294 தொகுதிகளுக்கும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுடன், அடுத்தாண்டு, ஏப்., - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள, அமித் ஷா, கட்சியின் பிரமாண்ட கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். அப்போது, திரிணமுல் காங்.,கில் இருந்து விலகிய, முன்னாள் அமைச்சர், சுவேந்து அதிகாரி, பா.ஜ.,வில் இணைந்தார்.மேலும், திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த, ஐந்து பேர் உட்பட, ஒன்பது எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த எம்.பி., ஒருவரும், பா.ஜ.,வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில், அமித் ஷா பேசியதாவது:மம்தா பானர்ஜி அரசு தொடர்ந்து, அரசியல் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், ஊழலில் திளைத்து வருகிறது. அனால், அதிருப்தி அடைந்தவர்கள், பா.ஜ.,வுக்கு வருகின்றனர்.தற்போது நடப்பது ஒரு தொடக்கம் தான். விரைவில் மேற்கு வங்கத்தில், அரசியல் சுனாமி வீசப் போகிறது.அடுத்த ஆண்டு, சட்டசபைக்கு தேர்தல் நடப்பதற்கு முன், கட்சியில், மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். தேர்தலில், 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று, பா.ஜ., ஆட்சி அமைப்பது உறுதி.பா.ஜ., தலைவர் நட்டா இங்கு வந்தபோது, அவருடைய காரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நீங்கள் எந்த அளவுக்கு வன்முறையில் ஈடுபடுகிறீர்களோ, அந்த அளவுக்கு, பா.ஜ., வலுபெற்று வருகிறது.
நாங்கள், அவருடைய கட்சியின் முக்கியத் தலைவர்களை வேட்டையாடி வருவதாக, மம்தா கூறியுள்ளார். நீங்கள் இதற்கு முன் எந்தக் கட்சியில் இருந்தீர்கள். காங்கிரசில் இருந்து வெளியே வந்து தானே, இந்தக் கட்சியைத் துவக்கினீர்கள்.மத்திய அரசின், 80 மக்கள் நலத் திட்டங்களை, மேற்கு வங்கத்தில் செயல்படுத்தாமல் தடுத்துள்ளார் மம்தா. மக்களுக்கு அந்தத் திட்டப் பயன்கள், அடுத்தத் தேர்தலில், பா.ஜ., வென்ற பிறகு கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
விலகியது ஏன்?
திரிணமுல் காங்.,கின் முக்கியத் தலைவராக விளங்கியவர், சுவேந்து அதிகாரி. கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தது குறித்து, தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை, அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:திரிணமுல் காங்., ஒவ்வொரு தொண்டனாலும் கட்டப்பட்டது. கடந்த, 2011 தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பதற்கு, ஒருவர் மட்டுமே காரணமில்லை. கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் அதற்கு காரணம். ஆனால், தங்களுடைய நலனை மட்டுமே கட்சித் தலைமை பார்க்கிறது.வரும், சட்டசபை தேர்தல், தங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மேற்கு வங்கம் மற்றும் திரிணமுல் காங்., ஒருவருடைய குடும்பச் சொத்து அல்ல.
எனக்கு, 'கொரோனா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, கட்சியைச் சேர்ந்த யாரும் விசாரிக்கக் கூட இல்லை. ஆனால், அமித் ஷா, இரண்டு முறை என்னைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க விரும்பவில்லை.
அமித் ஷா உடன் எனக்கு நீண்ட கால நட்பு உள்ளது. பா.ஜ.,வில் சேரும்படி, அவர் இதுவரை கூறியதில்லை. இது நானாக எடுத்த முடிவு. வரும் சட்டசபை தேர்தலில், மேற்கு வங்கத்தில், பா.ஜ., ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயி வீட்டில் சாப்பாடு
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, மேற்கு வங்கம் சென்றுள்ள, அமித் ஷா, பஷ்சிம் மெதினிபுர் மாவட்டத்தில், ஒரு விவசாயியின் வீட்டில், நேற்று மதிய உணவு சாப்பிட்டார்.தரையில் அமர்ந்து, வாழை இலை விருந்தை அவர் ருசித்துச் சாப்பிட்டார்.கட்சியின் தேசிய பொதுச் செயலர், கைலாஷ் விஜய்வர்க்கியா, தேசிய துணைத் தலைவர், முகுல் ராய், மாநிலத் தலைவர், திலிப் கோஷ் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE