மொராதாபாத்:திருமணம் செய்வதற்காக, கட்டாய மதமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், போதிய ஆதாரம் இல்லாததால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. ஹிந்துப் பெண்களை காதலித்து, திருமணம் செய்வதற்காக, கட்டாய மதமாற்றம் செய்வதாக, பல புகார்கள் எழுந்தன. இதை தடுக்கும் வகையில், சமீபத்தில் மதமாற்ற தடை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொராதாபாதைச் சேர்ந்த ஒருவர், தன் மகள் பிங்கியை, திருமணம் செய்வதற்காக கட்டாயப் படுத்தி, மதமாற்றம் செய்வதாக புகார் கூறியுள்ளார்.இந்நிலையில், மொராதாபாத் பதிவாளர் அலுவலகத்தில், திருமணப் பதிவுக்காக பிங்கி, ரஷீத் மற்றும் அவருடைய சகோதரர் சலீம் சென்றனர். பஜ்ரங்தள் என்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர். திருமணப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், புதிய சட்டத்தின்படி, மாவட்ட கலெக்டரின் அனுமதியைப் பெறவில்லை என்று அவர்கள் கூறின
இம்மாதம், 5ம் தேதி, ரஷீத் மற்றும் அவருடைய சகோதரர் சலீம் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. தான் கட்டாயப்படுத்தப்படவில்லை என, பிங்கி கூறியுள்ளதாக, நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.மதமாற்றம் செய்ய முயன்றது நிரூபிக்கப்படாததால், ரஷீத் மற்றும் சலீமை விடுவிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து, 15 நாட்களுக்குப் பிறகு, அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE